திறந்தவெளியில் வைத்தாலும், 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் பசும் பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கொழுப்பு சத்து அடிப்படையில், பாலை தரம் பிரித்து ஆரஞ்ச் பால் பாக்கெட் 500 மி.லி., 24 ரூபாய்; பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்; நீல நிற பாக்கெட் 20 ரூபாய் என, ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
அதிக கொழுப்பு சத்து உள்ள வர்த்தக ரீதியான பால், 'டீ மேட்' என்ற பெயரில், சிவப்பு நிற பாக்கெட்டில் அடைத்து, அக்டோபரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இது, 500 மி.லி., 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், 90 நாட்கள் வரை கெடாத பசும்பால், 500 மி.லி., 30 ரூபாயில், 'ஆவின் டிலைட்' என்ற பெயரில், பாக்கெட்டில் விற்பனைக்கு வந்துஉள்ளது.
இது தொடர்பாக, ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தினமும் 1 லட்சம் லிட்டர் வரை 'பேக்கிங்' செய்யும் திறன் கொண்ட சோழிங்கநல்லுார் பால் பண்ணையில், ஆவின் டிலைட் பசும்பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பாலில், 3.5 சதவீத கொழுப்பு சத்து; 8.5 சதவீதம் இதர சத்துக்கள் உள்ளன.
குளிர்சாதன வசதியின்றி, 90 நாட்கள் வரை வைத்து இந்த பாலை பயன்படுத்தலாம். எந்தவித வேதிப்பொருட்களும் சேர்க்காமல், நவீன தொழில்நுட்ப முறையில் இந்த பால் பேக்கிங் செய்யப்படுகிறது.
தொலைதுார பயணங்களுக்கு எடுத்து செல்ல உகந்தது. மழை மற்றும் பேரிடர் காலங்களில், ஆவின் டிலைட் பால் பொதுமக்களுக்கு பெரிதும் உதவும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments