தமிழகம், புதுச்சேரியில், எட்டு மாவட்டங்களில் இன்று மிக கன மழையும்; 23 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தின் தென் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்யும். சென்னையில், இன்று மிதமான மழை பெய்யும்; சில நேரங்களில் வானம் மேக மூட்டமாக காணப்படும்.
கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும். ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக சீர்காழியில், 22 செ.மீ., மழை பதிவானது. தஞ்சாவூர், 18; கொள்ளிடம், 16; சிதம்பரம், 15; சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, 12 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதேபோல, தமிழகத்தில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments