அரசின் போட்டி தேர்வுகள் பயிற்சி மையங்கள் சார்பில் காவலர் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் பயிற்சித்துறை தலைவர் இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு:போட்டித் தேர்வர்களுக்காக, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அண்மையில் நடந்த குரூப் 4 எழுத்து தேர்வுக்கு இப்பயிற்சி மையங்களால் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்ப படிவம் ஆகியன www.civilservicecoaching.com என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் மேற்படி இணைய தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 14ம் தேதி வரை தேர்வர்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையங்களில் நேரடியாக அளிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 044-24621475 மற்றும் 044-24621909 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இத்தேர்விற்கு வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். காத்திருப்பு தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான நாட்கள் காலியிடங்களுக்கேற்ப www.civilservicecoaching.com இணையவழியாக தெரிவிக்கப்படும். பயிற்சி வகுப்புகள் வருகிற 21ம் தேதி முதல் தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments