கோயில் அனைத்து பக்தர்களுக்கும் பொதுவானது. திருவிழாக்களில் ஜாதி, நிற பாகுபாடு பார்க்கக்கூடாது என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மங்களநாடு கிராமத்திலுள்ள அய்யனார் மற்றும் கருப்பர் கோயில் குடமுழுக்கு விழாவில், அனைத்து தரப்பினரும் பங்கேற்க அனுமதிப்பது தொடர்பாக செல்லக்கண்ணு என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர் கோரும் நிவாரணத்தை தர முடியாது. அதே நேரம், நன்கொடை மற்றும் தலைக்கட்டு வரியை அனைத்து தரப்பினரிடமும் பெறத் தயாராக உள்ளதாக கூறுவதை இந்த நீதிமன்றம் பதிவு செய்து கொள்கிறது என உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து மதிமுருகன் என்பவர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வழிபாட்டுத்தலமான கோயில் அனைத்து பக்தர்களுக்கும் பொதுவானது. கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் திருவிழாக்களில் பங்கேற்கும் உரிமை உள்ளது.
எனவே, கோயில் திருவிழாக்களில் ஜாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்த வழக்கை பொறுத்தவரை அனைத்து தரப்பினர் என்பது எஸ்சி-எஸ்டி உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் இணைந்தது தான். இதன்படி, அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து குடமுழுக்கு விழாவை கொண்டாட அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.
0 Comments