Ad Code

Responsive Advertisement

அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு சட்டம் - திருத்தம் செய்ய வேண்டும் - ஐகோர்ட் அறிவுறுத்தல்

 



தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி 2016ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின் கீழ் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்தும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, ‘‘முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 30 சதவீத பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கி விட்டு, அதன்பின் சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்றும் நடைமுறையை தமிழக அரசும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பின்பற்றுவது துரதிருஷ்ட வசமானது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. இதே நடைமுறைப்படி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது.


அதேசமயம் தகுதி அடிப்படையில் பணிநியமனம் பெறும் உரிமையை மறுக்க முடியாது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதலில் பொதுப்பிரிவையும், பிறகு சமூக ரீதியிலான இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்பி விட்டு, அதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பூர்த்தியாகவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரப்ப வேண்டுமோ, அத்தனை இடங்களில் பெண்களை நிரப்ப வேண்டும்’’ என உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்குகளை முடித்து வைத்தனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement