ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரியை தவிர்க்கும் வகையில் 26 கிலோ அரிசி மூட்டையை தொடர்ந்து 30 கிலோ கொண்ட அரிசி மூட்டைகளை விற்பனைக்கு ெகாண்டுவர முடிவு செய்துள்ளதாக வேலூர் அரிசி மண்டி வியாபாரிகள் தெரிவித்தனர். ஒன்றிய அரசு பேக்கிங் செய்யப்பட்ட அரிசி மூட்டைக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கடந்த 16ம் தேதி அரிசி ஆலைகள் மற்றும் அரிசி மண்டி வியாபாரிகள் கடையடைப்பில் ஈடுபட்டனர். 25 கிலோ வரை பேக்கிங் செய்யப்பட்ட அரிசிக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால், ேபக்கிங் செய்யப்பட்ட அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்ந்துள்ளது.
இதையடுத்து, அரிசி ஆலைகள் மற்றும் மொத்த வியாபாரிகள் சேர்ந்து, 25 கிலோவுக்கு பதிலாக, 26 கிலோ சிப்பத்தை தயார் செய்து, விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். மேலும் வேலூர் மாவட்டத்திற்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து 26 கிலோ பாக்கிங் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்ட அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் அருணகிரி கூறுகையில், 25 கிலோவுக்கு மேல் ஜிஎஸ்டி இல்லை என்பதால் 26 கிலோ மூட்டை தயாரித்து விற்கப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு ரூ.50 வரை மிச்சமாகும். 25 கிலோ எடையுள்ள பைகள் இருப்பில் அதிகமாக உள்ளது. அவை காலியானதும், 30 கிலோ ேபக்கிங் செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.
0 Comments