தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்ற 10ம் வகுப்பு தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் மிக எளிதாக இருந்ததால் மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதியதாக தெரிவித்தனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வில் மொத்தம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களுக்காக தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 3936 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, தமிழகம், புதுச்சேரியில் இருந்து தனித் தேர்வர்கள் 30 ஆயிரத்து 765 பேரும் தேர்வில் பங்கேற்றனர்.
நேற்று தொடங்கிய தேர்வுக்காக 8 மணிக்கே தேர்வு வளாகங்களுக்கு மாணவர்கள் வந்து காத்திருந்தனர். காலை 9.30 மணி அளவில் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக மாணவர்களிடம் செல்போன், துண்டுச் சீட்டு ஆகியவை இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டது. 10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டு முதல் பக்கத்தில் தேர்வு தொடர்பாக குறிப்புகள் எழுத 5 நிமிடமும், அதற்கு பிறகு கேள்வித்தாள் படித்து பார்க்க 10 நிமிடமும் என 15 நிமிடம் அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து 10.15 மணிக்கு மாணவ, மாணவியர் விடை எழுத தொடங்கினர். மதியம் 12.45 மணிக்கு தேர்வு முடிந்தது. முதல் நாளான இன்று மொழிப்பாடத்தில் தமிழ்த் தேர்வு நடந்தது.
தேர்வு முடித்து வெளியில் வந்த மாணவ, மாணவியரிடம் தேர்வு குறித்து கேட்ட போது, தமிழ் பாடத் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் மிகவும் எளிதாக இருந்தது. கடந்த திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் அதிகம் இடம்பெற்றதால் அச்சமின்றி எழுத முடிந்தது. கொரோனா காலத்தில் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால், பள்ளிக்கு போக முடியாத நிலை இருந்தது. அதனால் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. அப்படி குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டன.
பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து எந்த கேள்வியும் கேட்கவில்லை. அதனால் தேர்வும் எளிதாக இருந்தது என்று தெரிவித்தனர். இந்நிலையில், நேற்றைய தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 500 முதல் 900 என்ற அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தெரியவந்துள்ளது. இதன்படி சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை அரசு காப்பாற்றும்
பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று தொடங்கியதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, ராயப்பேட்டையில் உள்ள ஹாபர்ட் முஸ்லிம் பெண்கள் மேனிலைப் பள்ளிக்கு நேரில் சென்று அங்கு தேர்வு எழுத வந்திருந்த மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் இன்று பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக் கல்வித்துறை செய்துள்ளது.
இன்று தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், வாழ்த்து தெரிவித்தோம். மதிப்பெண் மட்டுமே மனிதனை மதிப்பிட முடியாது என்று முதல்வர் கூறியதை மனதில் வைத்து மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். தற்போது சட்டப் பேரவை நடப்பதால் அந்த கூட்டத் தொடர் முடிந்த பிறகு எந்தெந்த மாவட்டங்களுக்கு நான் செல்கிறேனோ அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்வேன். மாணவர்கள் தைரியமாக தேர்வு எழுதுங்கள், உங்களை காப்பாற்ற இந்த அரசு உள்ளது. இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
புழல் சிறையில்10ம் வகுப்பு தேர்வு எழுதிய 58 கைதிகள்
தமிழகத்தில் நேற்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவங்கியது. சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள தேர்வு மையத்தில் தண்டனை பிரிவை சேர்ந்த 39 பேர், விசாரணை பிரிவில் 11 பேர், பெண்கள் பிரிவில் 8 பேர் என மொத்தம் 58 கைதிகள் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இந்த, தேர்வு மையத்தை சிறைத்துறை துணை தலைவர் முருகேசன் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
முன்னதாக, 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து கைதிகளும் வெற்றி பெற சிறைத்துறை துணை தலைவர் முருகேசன் வாழ்த்து தெரிவித்தார். சிறை வளாகத்தில் பொது தேர்வு நடைபெறுவதால், அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், புழல் மத்திய சிறை வளாகத்தில் தண்டனை பிரிவில் 12 பேர், விசாரணை பிரிவில் ஒருவர், பெண்கள் பிரிவில் 4 பேர் என மொத்தம் 17 பேர் நேற்று, பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments