பள்ளி மாணவர்களின் தேவையை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றும், இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தியாவுக்கே ஒரு முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளித்து பேசியதாவது: 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கிற மாணவிகளுக்கு அவர்கள் பட்டப் படிப்போ, பட்டயப் படிப்போ படிக்கும்போது மாதம் ₹1000 வழங்கும் திட்டம், மிகப் பெரிய புரட்சி திட்டம். பள்ளிகளில் குடிநீர் வசதியை அதிகப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தூய்மை பணிகளை செய்ய ₹36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்து தான் பல திட்டங்களை செய்து வருகிறோம். மிக உன்னதமான திட்டமான பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டு திட்டம். இத்திட்டத்துக்கு ₹7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பற்றி சொன்னார்கள். இதை தடுக்க துளிர் என்ற அமைப்பு மூலம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். மாணவிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ‘குட் டச் பேடு டச்’ பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வகுப்புகளிலும் அதற்கான விழிப்புணர்வு போர்டு வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளோம். ‘மாணவர்கள் மனசு’ என்று ஒரு பெட்டியையும் வைத்துள்ளோம். 15 நாட்களுக்கு ஒரு முறை அதை திறந்து மாணவர்கள் ஏதாவது புகார் போட்டிருக்கிறார்களா என்பதை எடுத்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகளை திறப்பது முக்கியமல்ல, அவர்களின் கற்றல் இடைவெளியை எப்படி போக்க போகிறீர்கள் என்று முதல்வர் கேட்டார். அப்படி உதித்தது தான் இல்லம் தேடி கல்வித் திட்டம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திட்டம் மூலம் 30லட்சம் மாணவ, மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். இதை இன்னும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க உள்ளோம். இத்திட்டம் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு ஒரு முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்ய கூறினார்கள். டிஆர்பி மூலம் 9,484 பேர் தேர்வு செய்ய உள்ளோம்.மதுரை மாவட்டத்தில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் இப்போது கட்டப்பட்டு வரும் கலைஞர் பெயரில் தொடங்கப்பட உள்ள நூலகமும் ஒரு சிறப்பை பெறும். இந்த அளவுக்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments