அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்துவிட்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்க செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்ைக மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திருப்பரங்குன்றம் தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா (அதிமுக) பேசியதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி என்று கூறி 13 ஆண்டுகளாக வெறும் ₹10 ஆயிரத்துக்கு பணியாற்றிய 135 தொழில்நுட்ப மற்றும் பகுதிநேரப் பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாதந்தோறும் ₹10.50 கோடி சம்பளம் கொடுக்கும் அந்த பல்கலை, அவர்களுக்கு வழங்கி வந்த மொத்த சம்பளம் ₹11 லட்சம் தான். இந்த பணத்தை கூட தர முடியவில்லை என்றால் ஆச்சரியமாக உள்ளது. எனவே அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கூறியிருக்கிறீர்கள். அதை வரவேற்கிறோம். ஆனால் 6 லட்சம் மாணவிகளுக்கு அந்த நிதியை வழங்குவதாக கூறினீர்கள். ஆனால் 2 லட்சம் மாணவிகள் தான் உயர் கல்வியில் சேர வாய்ப்புள்ளது. அந்தத் திட்டத்தை ஆதிதிராவிடர், பட்டியல் இன மாணவிகளுக்கும், பிற மலைக்கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
அமைச்சர் பொன்முடி: அரசு உயர் நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகள் அனைவருக்கும் ₹1000 வழங்கும் திட்டம் பொருந்தும். அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்துவிட்டு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 2 லட்சம் என்பதெல்லாம் தவறு. 6 லட்சம் மாணவிகள் இதில் பயனடைவர்.
ராஜன் செல்லப்பா: கல்விக் கட்டண உயர்வு, தேர்வுக் கட்டண உயர்வு, வினாத்தாள் கசிதல், பள்ளி சுற்றுச்சுவர் இடிதல், பள்ளி பஸ் விபத்துகள், கழிப்பறை இல்லாமை, கழிப்பறையை மாணவர்கள், ஆசிரியர்கள் சுத்தம் செய்யும் அவல நிலைமை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லாத நிலை, ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டும் நிலைமை, வகுப்பறைகளில் ஆசிரியர்கள் தூங்கும் நிலைமை, மாணவர்களின் பஸ் மாடிப் பயணம், மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற நிலையை மாற்ற வேண்டும்.
பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க தனி குழுவை அமைக்க வேண்டும். அதற்கு மாணவர்களை பயன்படுத்தக் கூடாது. நீங்கள் அளித்த வாக்குறுதிகளான, நீட் தேர்வு, மேகதாது அணையில் கர்நாடகத்தின் ஆதிக்கம், 7 பேர் விடுதலை, குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள 15 மரங்கள், தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றில் அரசுக்கு சில சிக்கல்கள் உள்ளன என்றே நினைக்கிறேன்.
0 Comments