தனியார் பள்ளி வாகனம் மோதி பள்ளிச் சிறுவன் இறந்த சம்பவத்தில், அந்த பள்ளி முதல்வர் மற்றும் பொறுப்பு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை வளசரவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் வாகனத்தில் சிக்கி 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் கடந்த 28ம் தேதி இறந்தான். இந்த சம்பவத்தை அடுத்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோசஸ் நேரடியாக சென்று அங்கு விசாரணை நடத்தி, ஒரு அறிக்கை தயார் செய்து அதை மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு அனுப்பியிருந்தார்.
அதில், பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் 63 வயது நிரம்பிய பூங்காவனம் என்பவர் தான் இந்த சம்பவத்துக்கு காரணம். வேனில் சிக்கி படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்துள்ளார். அந்த வாகனத்துக்கு தனியாக பொறுப்பாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன், 24 மணி நேரத்தில், பள்ளி வாகன விபத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், வளசரவாக்கம் பள்ளி மாணவன் இறந்த சம்பவத்துக்கு காரணமாக இருந்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது போல அந்த பள்ளியின் முதல்வர் மற்றும், மாணவர்கள் வருகையை கவனிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே போலீசார் மேற்கண்ட பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், தற்போது பள்ளி முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், விரைவில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.
0 Comments