கரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.24) நடைபெற உள்ளது.
ஏற்கெனவே அளிக்கப்பட்ட தளா்வுகளில் சிலவற்றை திரும்பப் பெறவும், நோய்த் தடுப்பு விதிகளைக் கடுமையாக்கவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், தற்போதைய சூழலில் பொது முடக்கம் மற்றும் நேரக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டிய அவசியம் எழாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களாக கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் 60-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியிருப்பதும், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கரோனா பரவல் அதிகரித்து வருவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த இரு வாரங்களில் நான்காவது அலைக்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். கடந்த ஜனவரி மாதத்தில் மூன்றாம் அலை உச்சத்தில் இருந்துபோது, தமிழகத்தில் அதி தீவிரமாக ஒமைக்ரான் வகை தீநுண்மி தொற்று பரவியது.
இந்நிலையில், மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வா் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காலை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலா்களோடு காணொலி முறையில் முதல்வா் கலந்துரையாட உள்ளாா்.
0 Comments