ஒரு சகோதரி வீட்டில் கறி சோறு சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் காரமாக இருந்தது. என்னம்மா இவ்வளவு காரமாக இருக்கிறது என்று கேட்டதற்கு, காரமாக சாப்பிட்டால்தான் நாங்கள் பலத்தோடு, ஆரோக்கியத்தோடு இருக்க முடியும். எங்களிடத்தில் கரோனா கூட வரமுடியாது என்று பெருமையோடு சொன்னார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆவடியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரையில், நீங்கள் நன்றாக இருந்தால், நான் மட்டுமல்ல, இந்த நாடே நன்றாக இருக்கும். இப்பொழுது கூட ஒரு சகோதரி வீட்டில் உட்கார்ந்து கறி சோறு சாப்பிட்டுவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.
கொஞ்சம் காரமாக இருந்தது. என்னம்மா இவ்வளவு காரமாக இருக்கிறது என்று கேட்டதற்கு, காரமாக சாப்பிட்டால்தான் நாங்கள் பலத்தோடு, ஆரோக்கியத்தோடு இருக்க முடியும். எங்களிடத்தில் கரோனா கூட வரமுடியாது என்று பெருமையோடு சொன்னார்கள். ஆகவே, நான் கற்றுக்கொண்டேன். இனிமேல், நானும் இன்றிலிருந்து காரம் அதிகமாக சேர்த்துக் கொள்ள போகிறேன்.
அது உங்கள் மூலமாக இப்பொழுது தெரிந்து கொண்டேன்.
நான் ஒரு சில மாதங்களுக்கு முன்னால், ஒரு நாள் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு செய்தியைப் பார்த்தேன். என்ன என்று சொன்னால், அந்த செய்தி வாட்ஸ்அப்பில் வந்தது. மாமல்லபுரம் அருகில் உள்ள பெருமாள் கோயிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சி, எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுகிற நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சிக்கு நரிக்குறவர் பெண்ணுக்கு உணவளிக்க மறுத்து இருக்கிறார்கள். உள்ளே விட மறுத்திருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியில் இருக்கின்ற ஒரு பெண் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அச்சப்படாமல் அதை அப்படியே செய்தியாக்கி அதை வீடியோவில் பேசியதை நானும் பார்த்தேன்.
அந்த உணவளிக்கக் கூடிய நிகழ்ச்சியில் நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை அனுமதிக்காமல் இப்படி ஒரு கெட்ட காரியத்தை செய்திருக்கிறார்களே என்று நான் கோபப்பட்டேன், உடனே அறநிலையத்துறை அமைச்சர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தச் செய்தியை சொன்னேன். நீங்கள் பார்த்தீர்களா, நான் தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்அப்பில் பார்த்தேன். அங்கே சாப்பாடு போடுகின்ற இடத்தில் நரிக்குறவர் இனத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய ஒரு பெண்ணை அனுமதிக்காமல், ஒரு கொடுமையை செய்திருக்கிறார்களே, இது நியாயமா? உடனடியாக நீங்கள் அங்குப் போகவேண்டும். என்னவென்று விசாரியுங்கள். அந்தப் பெண்ணை அந்தக் கோயிலில் உட்கார வைத்து எல்லோருக்கும் மத்தியில் உட்கார்ந்து அவரை சாப்பிட வைக்கவேண்டும்.
அதுமட்டுமல்ல, அமைச்சராக இருக்கக்கூடிய நீங்களே அருகில் இருந்து சாப்பிட வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன். அதற்குப் பிறகு அவர் அந்த இடத்திற்குச் சென்று உடனே அந்தப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, அந்தக் கோயிலில் நடைபெறுகின்ற அன்னதானத்தில் பங்கேற்க வைத்து அருகில் அமர்ந்து உணவு அருந்திய காட்சியை நான் பார்த்த பிறகுதான் எனக்கு நிம்மதி ஆனது. சந்தோஷமானது.
இது எனக்கு பெருமை என்பதைவிட தைரியமாக அந்தப் பெண் வாதாடியதுதான் எனக்குப் பெருமை. அந்தப் பெண் பெயர் அஸ்வினி. ஆகவே, அந்தப் பெண் வாதாடி, போராடி அதை வெளிப்படுத்தியது உள்ளபடியே அந்தப் பெண்ணுக்கு இங்கிருந்தே என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
பிறகு அந்தப் பெண்ணுடைய குடும்பச் சூழ்நிலை என்ன? அந்தப் பெண் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய, பகுதியில் இருக்கக்கூடிய நிலைமைகள் என்ன? என்பதைப் பற்றி குறைகளை எல்லாம் கேட்டு, அப்பெண், அவரது உறவினர்கள் வாழும் பூஞ்சேரி கிராமத்திற்கு நானே நேரடியாக 4.11.2021 அன்று சென்றேன். அங்குள்ள நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியின மக்களையெல்லாம் நேரடியாகச் சந்தித்தேன்.
அவர்கள் ஒவ்வொருவரிடமும் பேசினேன். கருத்துக்களைக் கேட்டேன். உங்கள் குறைகள், என்ன? உங்கள் பிரச்சனைகள் என்ன? தைரியமாக வந்து சொல்லுங்கள். அதையெல்லாம் இந்த அரசு நிச்சயமாக உடனடியாகச் செய்ய முடியாவிட்டாலும், படிப்படியாக, நிச்சயமாக, உறுதியாக நாங்கள் செய்து முடிப்போம். தைரியமாக எது இருந்தாலும் சொல்லுங்கள் என்று சொல்லி கேட்டேன். பல பிரச்சனைகளை எல்லாம் சொன்னார்கள். அதில் முக்கியமாக நீண்ட காலமாக அவர்களுக்கு வழங்கப்படாத வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனைப் பட்டாக்கள், சாதிச் சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை இது எல்லாம் வழங்கப்படாமல் இருந்தது. 4.53 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நானே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதை வழங்கி இருக்கிறேன். இந்த நிகழ்வு பூஞ்சேரியில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் இந்தப் பிரச்சனை இருக்கிறது.
அதற்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் நான் உத்தரவிட்டேன். நரிக்குறவர்கள், பழங்குடியின மக்கள், இதர விளிம்புநிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமங்களையும் நீங்கள் சென்று ஆய்வு செய்து, அந்த ஒவ்வொரு குடும்பத்திற்குமான அரசின் நலத்திட்ட உதவிகள் என்னென்ன தேவைப்படுகிறது என்பதற்கு ஒரு பட்டியல் எடுத்து, ஆய்வு செய்து, அந்த அறிக்கையை உடனடியாக அனுப்பிட வேண்டுமென்று நான் உத்தரவிட்டேன்.
அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஒரு இயக்கமாகவே நடத்தப்பட்டு கடந்த நான்கு, ஐந்து மாதங்களில் நரிக்குறவர், பழங்குடியின மக்கள், இதர விளிம்புநிலை மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆகவே இந்த அரசு உங்களுக்காக என்றைக்கும் துணைநிற்கும். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, என்ன பிரச்சனை இருக்கிறதோ, அதற்கெல்லாம் சட்டரீதியாக நிச்சயமாக அதையெல்லாம் நாங்கள் நிறைவேற்றி தருவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்கிறேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
0 Comments