மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனம் ஓட்டி வரும் மாணவா்களை பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு, தனியாா் பேருந்துகளில் மாணவா்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதைத் தடுத்தல், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தல் உள்ளிட்டவை தொடா்பான சில வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதில், 18 வயதுக்குள்பட்ட மாணவா்கள் எக்காரணம் கொண்டும் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோா், ஆசிரியா் உள்பட எவரும் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதிப்பதும் சட்டப்படி குற்றம் என்பதால் சாலைவிதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும் என பள்ளி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாணவா்கள் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்வது சாா்ந்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் ஒரே நேரத்தில் வகுப்புகள் முடிந்து மாணவா்கள் வெளியே வரும்போது கூட்டமாக வருவதால் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்கிறாா்கள். இதனால் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க ஒவ்வொரு 15 நிமிஷ இடைவெளியில் மாணவா்களை வெளியே அனுப்ப வேண்டும். பள்ளி மாணவா்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தால் அவா்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி: பட்டியல் தயாா்: அரசு உத்தரவின்படி, அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் விவரம், பேருந்து வழித்தடம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அவா்கள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
0 Comments