நிதி நெருக்கடி காரணமாக பேப்பர் தயாரிக்காததால் பள்ளி மாணவர்களின் தேர்வுகளை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. இலங்கை ரூபாயின் மதிப்பை அரசு சமீபத்தில் வெகுவாக குறைத்தது.
இதனால் ஏற்றுமதி, சுற்றுலா துறை பாதித்தது. இதன் காரணமாக அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்கியது. இதனால், அங்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த கடன் தொகை கடந்த மாத நிலவரப்படி ₹52,440 கோடியாக உள்ளது. ஆனால், அந்நிய செலாவணி கையிருப்பாக ₹17,480 கோடி மட்டுமே உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வு அடைந்துள்ளது.
சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மின் பற்றாக்குறையினால் நாடு முழுவதும் தொடர் மின்வெட்டு அமலில் உள்ளது.இந்நிலையில், மாணவர்களின் தேர்வுக்கான பரீட்சை தாள் தயாரிக்க போதிய நிதியின்மையால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை மேற்கு மாகாண கல்வித்துறை தெரிவிக்கையில், `இலங்கையில் மாணவர்களுக்கான பருவத் தேர்வு நாளை (இன்று) முதல் தொடங்க உள்ளது. ஆனால், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பரீட்சை தாள், அச்சிடும் மை தயாரிக்க போதிய நிதி இல்லாததால், 4.5 லட்சம் மாணவர்களின் தேர்வு, கால வரைறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி முதல்வர்கள் தேர்வை குறிப்பிட்ட காலத்தில் நடத்த முடியவில்லை,’ என்று கூறியுள்ளது.
0 Comments