5ம் வகுப்பு மாணவி இறப்பில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி, பாச்சலூர் நடுநிலைப்பள்ளி முன்பு உறவினர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம், பெரும்பறை அருகே உள்ள பாச்சலூர் மழை கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் மகள் பிரித்திகா (9). இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த டிச.15ல் பள்ளி வளாகத்தில் தீயில் எரிந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் வழியில் பிரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அப்பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது. மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு மலைக்கிராம மக்கள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இருந்தபோதும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாணவி இறப்புக்கான காரணமும் தெரியவில்லை. இந்நிலையில் கொரோனா விதிமுறைகளில் தளர்வுக்கு பின், பாச்சலூர் நடுநிலைப்பள்ளி நேற்று திறக்கப்பட்டது. இதனையறிந்த பிரித்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு அமர்ந்து, மாணவியின் இறப்பில் தொடர்புடையவர்களை கண்டறிந்து உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளியில் படிக்கும் மற்ற குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தாண்டிக்குடி போலீசார், தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். தர்ணாவில் ஈடுபட்ட சத்யராஜ், அவரது மனைவி பிரியதர்ஷனி உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தர்ணா போராட்டத்தில் பள்ளி வளாகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments