கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசு ஊழியா்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், இந்த விலக்கு ஜனவரி 31 வரை அமலில் இருக்கும் என்றும், வீட்டிலிருந்தே பணிபுரிய அவா்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஊழியா்கள் கட்டுப்பாடுகள் நீங்கும் வரை அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் தமிழக அரசும் அமல்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அரசு ஊழியா்கள் அச்சத்துடனே அலுவலகங்களுக்குச் சென்று வருகின்றனா்.
எனவே, அரசு அதிகாரிகளுடன் முதல்வா் கலந்து ஆலோசித்து மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியா்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும்.
0 Comments