சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்க தீர்ப்பு எழுதிய பேனா முனையை கடைசியாக நீதிபதி முத்துக்குமரன் முறித்தார். அது ஏன்? அதன் பின்னணி என்ன? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மிழக வரலாற்றில் கருப்புப் புள்ளியாகக் கருதப்பட்ட சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கில், ஏப்ரல் 6 திங்கட்கிழமை இன்று மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை வழங்கிய பிறகு நீதிபதி முத்துக்குமரன், மரண தண்டனை தீர்ப்பு வழங்க பயன்படுத்திய பேனா முனையை கடைசியாக முறித்ததார். அவர் இப்படி செய்தது ஏன்? அதற்கு சிறப்பு விதிமுறைகள் இருக்கிறதா? என்பதை இங்கே பார்க்கலாம்.
வழக்கின் பின்னணி:
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறை கைது செய்தது. அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், தந்தை மகன் இருவர் மீதும் கொடூரமான தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகள் செய்ததால், பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
நீதிபதி முத்துக்குமரன் வழங்கிய அதிரடித் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, 9 போலீஸார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சுமார் ஆறு ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இன்று நீதிபதி ஜி. முத்துக்குமரன் தனது 500 பக்கத் தீர்ப்பை வாசித்தார். முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் 6 காவலர்கள் என மொத்தம் 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்கள் செய்த குற்றம் அரியவற்றில் அரிய வகை (Rarest of Rare) எனக் கருதி, 9 பேருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
ஏன் பேனா முனை முறிக்கப்பட்டது?
இந்த தீர்ப்பை அறிவித்துவிட்டு, நீதிபதி முத்துக்குமரன் தனது பேனா முனையை முறித்தார். இந்திய நீதித்துறையில் இது ஒரு மிக அரிதான மரபாகும். இதற்குப் பின்னால் 4 முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.
1. ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கும் தீர்ப்பை எழுதுவது நீதிபதிகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தரும். அந்தப் பேனாவைக் கொண்டு இனி எதையும் எழுதக்கூடாது என்ற நோக்கில் அது முறிக்கப்படுகிறது. இப்படி செய்ய வேண்டும் என்ற விதிகள் இல்லை
2. ஒருமுறை மரண தண்டனைத் தீர்ப்பில் கையெழுத்திட்டுப் பேனா முறிக்கப்பட்டுவிட்டால், அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியே அதனை மாற்றவோ, ரத்து செய்யவோ முடியாது.
3. ஒருவரின் மரணத்தை எழுதிய பேனா கறைபடிந்தது என்று நம்பப்படுகிறது. எனவே, அதே பேனாவைக் கொண்டு மற்ற பொதுவான வழக்குகளைத் தீர்க்க நீதிபதிகள் விரும்புவதில்லை.
4. இனி ஒருபோதும் இத்தகைய கொடூரமான குற்றமோ அல்லது அதற்கு மரண தண்டனை அளிக்கும் சூழலோ ஏற்படக்கூடாது என்ற பிரார்த்தனையாக இது பார்க்கப்படுகிறது.
தண்டனை பெற்றுத் தந்த முக்கிய சட்டப்பிரிவுகள்
இந்த வழக்கில் போலீஸாருக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கப் பின்வரும் பிரிவுகள் முக்கியப் பங்கு வகித்தன:
பிரிவு 302 (கொலை): திட்டமிட்டு ஒருவரைத் துன்புறுத்திக் கொலை செய்ததற்காக.
பிரிவு 120 பி (கூட்டுச் சதி): பல காவலர்கள் இணைந்து இந்தச் செயலைத் திட்டமிட்டதற்காக.
பிரிவு 201 (தடயங்களை அழித்தல்): ரத்தக் கறைகளைத் துடைத்தது மற்றும் சிசிடிவி பதிவுகளைச் சிதைத்ததற்காக.
பிரிவு 348: தவறான முறையில் சிறை வைத்துத் துன்புறுத்தியதற்காக.
பெண் காவலர் ரேவதியின் சாட்சியம்
இந்தத் தீர்ப்பில் பெண் காவலர் ரேவதியின் பங்கு அளப்பரியது. சக காவலர்களுக்கு எதிராக, உண்மையை நீதிமன்றத்தில் பதிவு செய்த அவரது சாட்சியமே, சிபிஐக்கு இந்த வழக்கில் மிகப்பெரிய பலமாக அமைந்தது. சாத்தான்குளம் தீர்ப்பு வெறும் தண்டனை மட்டுமல்ல, அது அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பாதிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறு ஆண்டுகள் கழித்து இன்று நீதி கிடைத்துள்ளது.
மேல்முறையீடு செய்ய முடியுமா?
இது இறுதித் தீர்ப்பு அல்ல. உயர் நீதிமன்றத்தில் அடுத்ததாக மேல்முறையீடு செய்யலாம். அங்கும் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால் அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்துவிட்டால், அதற்குப் பிறகு இரண்டு கடைசி வாய்ப்புகள் உள்ளன. அதாவது, மறுஆய்வு மனு, திருத்த மனு ஆகியவற்றை செய்ய முடியும். இதற்கு அடுத்தபடியாக, சட்ட ரீதியான அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்ட பிறகு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 72ன் படி இந்தியக் குடியரசுத் தலைவரிடமோ அல்லது பிரிவு 161ன் படி மாநில ஆளுநரிடமோ கருணை மனு தாக்கல் செய்யலாம்.

0 Comments