Ad Code

Responsive Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம் - படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு - என்ன நடந்தது?

 



பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை அருகே இன்று (நவ. 9) போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது.



பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றுவரும் படப்பிடிப்பு தளம் அருகேவுள்ள, குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



’பிக் பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் குடும்ப மதிப்புகளைக் காப்போம், பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்’ எனவும் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் அரங்கத்தின் வாயிலில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.



விஜய் தொலைக்காட்சியில் அக். 5ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 2017 முதல் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.



பின்னர் பிக் பாஸ் 8வது சீசனிலிருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் தொகுப்பாளருமே அவரே ஆவார்.



இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழரின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ளதாகவும், இளம் தலைமுறையின் மனநிலையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை மூலம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.



பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவில்லை என்றால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அக்கட்சியின் மகளிர் அணியினர் சென்னை புறநகரான குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதிக்கு அருகே பிக் பாஸ் அரங்கம் அமைந்துள்ளது.



போராட்டம் தீவிரமாக வாய்ப்புள்ளதால், படப்பிடிப்பு நடைபெற்று வரும் வேல்ஸ் கார்டன் அரங்கத்தின் வெளியே 100க்கும் அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement