ரயில் முன்பதிவு டிக்கெட் தேதியை இனி மாற்றிக் கொள்ளலாம் என்று இந்தியன் ரயில்வே குட் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயில் பயணத்தை ஏராளமான மக்கள் விரும்பி வருகின்றனர். தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் முன்பதிவு செய்தாலும் சில சூழ்நிலைகளால் பயண தேதியை மாற்றி அமைக்க வேண்டிய நிலை உருவாகிறது.
ரயில் முன்பதிவு டிக்கெட் தேதியை மாற்ற முடியும்
ரயில்வேயில் தற்போதுள்ள நடைமுறையில் பயணிகள் தங்கள் பயணத் தேதியை மாற்ற விரும்பினால், பழைய முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு தான் புதிய டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். நேரடியாக முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் தேதியை மாற்ற முடியாது.
இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் முதல் உறுதி செய்யப்பட்ட (Confirmed) ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை ஆன்லைனில் எந்தக் கட்டணமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வே அமைச்சர் சொன்ன குட்நியூஸ்
ஆனால் நீங்கள் மாற்ற விரும்பும் புதிய தேதியில் உறுதி செய்யப்பட்ட இருக்கை கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். ஏனெனில் நீங்கள் மாற்றும் தேதியில் ரயில்களில் காலியாக இருக்கும் இருக்கைகளை பொறுத்தே உங்களுக்கு சீட் கிடைக்கும்.
மேலும், மாற்று தேதியில் புதிய பயணச் சீட்டின் கட்டணம் அதிகமாக இருந்தால், பயணிகள் அந்த கட்டண வேறுபாட்டைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய நடைமுறை ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் என்டிடிவி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இப்போதைய டிக்கெட் விதிமுறைகள் என்ன?
தற்போதுள்ள விதிகளின்படி, ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை கன்பார்ம் செய்யப்பட்ட பயணச் சீட்டை ரத்து செய்தால், பயணக் கட்டணத்தில் 25% பிடித்தம் செய்யப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ரத்து செய்தால், கட்டணப் பிடித்தம் இன்னும் அதிகரிக்கும். அதே வேளையில் இறுதிக்கட்ட சார்ட் (Reservation Chart) தயாரிக்கப்பட்ட பிறகு பயணத்தை ரத்து செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments