அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் சாமானிய மக்களின் ஆசை பட்டியலில் இருந்தே வெளியேறும் நிலைக்கு தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
ஒரு சவரன் ஒரு லட்சத்தை எட்டும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 97,600 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாற்றில் முதல்முறையாக கடந்த 7 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.90,000-ஐ கடந்த நிலையில், தொடர்ந்து காலை, மாலை என இருவேளையும் விலை அதிகரித்து வருகின்றது.
தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ஒரு சவரனுக்கு ரூ. 1,960, புதன்கிழமை ரூ. 280, வியாழக்கிழமை ரூ. 320 உயர்ந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிரடியாக ரூ. 2,400 உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 12,200-க்கும் ஒரு சவரன் ரூ. 97,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அதிரடியாக உயர்ந்து வந்த வெள்ளியின் விலை, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை ஒரு கிராமுக்கு ரூ. 3 குறைந்து, ரூ. 203-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

0 Comments