விருதுநகர் முன்னாள் ஆட்சியர் ஜெயசீலன் சென்னை மாநகராட்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், விருதுநகர் மக்களுக்கு அவர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
விருதுநகர் முன்னாள் ஆட்சியர் ஜெயசீலன்
விருதுநகர் மாவட்டத்தின் ஆட்சியராக பணிபுரிந்து வந்தவர் ஜெயசீலன். இவர், கடந்த 2023-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து வந்த ஆட்சியர் ஜெயசீலன் அண்மையில் சென்னை மாநகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பள்ளி காலத்தில் மனதில் விழுந்த ஐஏஎஸ் விதை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ஜெயசீலன்., தனது பள்ளி படிப்பை சொந்த ஊரிலேயே முடித்தார். அவர் 10-ஆம் வகுப்பு பயிலும் போது, ஆட்சியர் ஆக வேண்டும் என்ற விதை அவரது மனதில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள வேளாண் கல்லூரியில் இளநிலை பட்டமும். தமிழ் இலக்கியத்தில் முதுநிலை பட்டமும் பெற்றார். மேலும், தமிழ் சிறை இலக்கியம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
2014-ஆம் ஆண்டு ஆட்சியரானார்
இதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்த அவர் முதலில் தோல்வி அடைந்தார். இரண்டாவது முயற்சியில் இந்திய வருவாயத்துறையில் ஆணையராக பணி கிடைத்து. அதில், பணிபுரிந்து கொண்டே ஐஏஎஸ் தேர்வை எழுதிய அவர் மூன்றாவது முறை ஆட்சியர் பதவியை எட்டிப்பிடித்தார். அதன்படி, அகில இந்திய அளவில் 45-ஆவது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்று ஜெயசீலன் தேர்ச்சி பெற்றார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த ஆட்சியர் ஜெயசீலன் முதலில் விழுப்புரம் மாவட்ட உதவி ஆட்சியராக பணி அமர்த்தப்பட்டார். இதை தொடர்ந்து, செங்கல்பட்டு சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அங்கு பணிபுரிந்து வந்த ஜெயசீலன், வீட்டு வசதித் துறை துணைச் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
விருதுநகர் மக்களின் மனதில் இடம் பிடித்த ஆட்சியர் ஜெயசீலன்
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் பணி செய்தார். இதன்பின்னரே, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்தார். அப்போது, விருதுநகர் மாவட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இதில், விருதநகர் மாவட்டத்தில் உயர் கல்வி சேர்க்கை மற்றும் மாவட்ட கல்விசார் முன்னெடுப்புகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வந்தார். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது என்பன உள்ளிட்ட மக்கள் பணிகளை விரைந்து மேற்கொண்டார். இது விருதுநகர் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
சென்னை மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்ட ஜெயசீலன்
கடந்த சில நாள்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று மும்பை ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிப்பை படிக்க தேர்வான சாத்தூரைச் சேர்ந்த மாற்றத்திறனாளி மாணவி யோகேஸ்வரியே ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து ஆட்சியர் ஜெயசீலன் பாராட்டி, ரூ.5000 உதவித் தொகையை வழங்கினார். இதனிடையே, அவர் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
விருதுநகர் மக்களுக்கு ஆட்சியர் எழுதிய கடிதம்
இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் விருதுநகர் மாவட்டம் தொழில், வேளாண்மை, வர்த்தகத் துறையில் கடந்த ஓர் நூற்றாண்டில் நிகழ்த்திய வளர்ச்சி இந்த மக்களின் உழைப்பின் சிறப்பை விளக்குகிறது. கல்வி, உயர்தொழில் மற்றும் பொருளாதாரத்தில் நம் மாவட்டம் என்றும் பல மடங்கு உயர்ந்து செழிப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி
மாவட்டத்தின் அமைச்சர்கள், சக அலுவலர்கள், சார் நிலைப் பணியாளர்கள், நேர்முக உதவியாளர்கள் என அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றதை மகிழ்வோடு நினைவு கூறுகிறேன். விருதுநகர் மாவட்டத்தின் அன்பு மக்களுக்கும், என் பணியில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் என் அன்பு நன்றியும், வணக்கம். மாணவச் செல்வங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சுகபுத்ரா ஐஏஎஸ் நேற்று (ஜூன் 25) பொறுப்பேற்றார்.
0 Comments