கீழடி ஆய்வை வெளியிட மறுக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
கீழடி பெயரை கேட்டாலே பாஜ அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள், பாஜவின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக தூக்கியடிக்கப்பட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் கீழடி அகழாய்வு கிடப்பில் போடப்பட்டது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு பல கட்ட ஆய்வு நடத்தி அருங்காட்சியகமும் எழுப்பப்பட்டது.
அறிவியல் பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகு அதை ஏற்று ஆய்வை வெளியிட தமிழர் விரோத ஒன்றிய பாஜ அரசு மறுத்து வருகிறது. கீழடி ஆய்வை ஒன்றிய அரசு அங்கீகரித்தால், தமிழர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் தான் மோடி அரசு ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது.
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாததை நம்பிக்கையின் பேரில் ராமர் பாலம் இருப்பதாக சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு நிறுத்தியது. ஆனால், கீழடி அகழாய்வு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, கீழடி ஆய்வை ஒன்றிய அரசு வெளியிடக்கோரி மதுரை விரகனூரில் நாளை காலை 10 மணிக்கு திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.
0 Comments