Ad Code

Responsive Advertisement

தமிழுக்கு ரூ.113 கோடி- சமஸ்கிருதத்துக்கு ரூ.2500 கோடியா? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

 




தென்னிந்திய மொழிகளைப் புறக்கணித்துவிட்டு சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் தருவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


சமஸ்கிருத மொழிக்கு ரூ.2500 கோடி நிதி ஒதுக்கிவிட்டு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 தென்னிந்திய மொழிகளுக்கு வெறும் ரூ.140 கோடி மட்டுமே ஒதுக்கி மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி


இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எவ்வளவு பணம் செலவிட்டுள்ளது என்பதை அறிவதற்காக தனியார் இணையதள செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக அதற்கான தரவுகளைக் கேட்டிருந்தது.


அதன்படி, வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், மத்திய அரசு கடந்த 2014-15 முதல் 2024-25 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் சமஸ்கிருதத்துக்கென சுமார் ரூ.2532.59 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இது தென்னிந்தியாவில் உள்ள 5 செம்மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகியவற்றுக்கு செலவிடப்பட்டத் தொகையைவிட 17 மடங்கு அதிகமாகும்.


இந்த மொழிகளின் வளர்ச்சிக்கென மத்திய அரசு தரப்பில் வெறும் ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருகிறது. அதாவது சமஸ்கிருதத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் (சராசரியாக) ரூ. 230.24 கோடியும், மற்ற ஐந்து மொழிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.13.41 கோடியும் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது அந்தத் தரவுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.


வஞ்சிக்கப்படும் தென்னிந்திய மொழிகள்


இந்த 5 செம்மொழிகளில் சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் 5 சதவிகிதத்துக்கு குறைவாக தமிழ் மொழிக்கும், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு 0.5 சதவிகிதத்துக்கு குறைவாகவும், ஒடியா மற்றும் மலையாள மொழிக்கு 0.2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


2004 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் முறையாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழிக்கு இந்திய மொழிகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.113.48 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிக்கிறது. இது 2005 ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமஸ்கிருதத்தைவிட 22 மடங்கு குறைவாகும்.


செம்மொழியாக அங்கீகரிக்கப்படாத உருது, ஹிந்தி மற்றும் சிந்தி மொழிகளுக்கான செலவினத்தைவிட சமஸ்கிருத மொழிக்கான செலவு அதிகமாகும். 2014-15 மற்றும் 2024-25 க்கு இடையில் இந்தி, உருது மற்றும் சிந்தி மொழிகளுக்கான நிதி ரூ. 1,317.96 கோடி ஆகும்.


இது சமஸ்கிருதத்திற்காக செலவிடப்பட்ட தொகையில் தோராயமாக 52.04 சதவிகிதம். இந்தக் காலகட்டத்தில், உருது மொழிக்கு ரூ. 837.94 கோடியும், ஹிந்தி மொழிக்கு ரூ. 426.99 கோடியும், சிந்திக்கு ரூ. 53.03 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.


2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 120 கோடி பேரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா மற்றும் கன்னடம் பேசுபவர்கள் 21.99 சதவிகிதம் பேர் இருந்தனர். ஆனால், சமஸ்கிருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. இருப்பினும், அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் மாதத்தில், முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் ஊக்குவிக்கப்படுவதைக் கண்டித்து, தமிழ் கலாசாரத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.


முதல்வர் ஸ்டாலின் ட்வீட்


அப்போது, “நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவுவதற்குப் பதிலாக, தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களிலிருந்து ஹிந்தியை நீக்குங்கள். வெற்றுப் பாராட்டுக்கு பதிலாக, தமிழை ஹிந்திக்கு இணையான அதிகாரபூர்வ மொழியாக ஆக்கி, சமஸ்கிருதம் போன்ற அழிந்துபோன மொழியைவிட தமிழுக்கு அதிக நிதி ஒதுக்குங்கள்” என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இந்த நிலையில், மீண்டும் இதுபற்றி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.


அந்தப் பதிவில், “சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது. மத்திய அரசு, தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே வடிக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!” எனப் பதிவிட்டுள்ளார்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement