தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் பாராட்டி நிதியுதவி அளித்து வருகிறார்.
அந்த வகையில் முதற்கட்டமாக 80 தொகுதிகளைச் சேர்ந்த முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (30.05.2025) சந்தித்துப் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்.
முன்னதாக இந்த விழாவில் விஜய் பேசுகையில், “நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் அடுத்த வருடம் என்ன நடக்கப் போகிறது என்றால் வண்டி வண்டியா கொண்டு வந்து கொட்டப் போகிறார்கள்.
அது அத்தனையும் உங்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணம் தான். என்ன செய்யப் போகிறீர்கள்?. என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும். அதை நான் சொல்லித்தான் புரியவைக்க வேண்டும் என்று ஒன்றும் அவசியம் இல்லை. மை டியர் பேரண்ட்ஸ் உங்களிடம் சிறிய கோரிக்கை.
உங்கள் குழந்தைகளில் விஷயத்தில் எதிலும் எதுவும் போர்ஸ் பண்ணாதீர்கள். பிரஷர் போடாதீர்கள். எதுவும் இம்போஸ் பண்ணாதீர்கள். முதலில் அவர்களுக்கு என்ன பிடித்துள்ளது என்று தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ற மாதிரி வழி நடத்துங்கள். நான் உறுதியாக சொல்கிறேன் எத்தனை தடைகள் வந்தாலும் அவங்களுக்கு பிடித்த விஷயத்தில் அவங்க அவங்களுக்கு பிடித்த துறையில் அவர்கள் கண்டிப்பா சாதித்துக் காட்டுவார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தது என்னவென்றால் சாதி மதத்தை வைத்துப் பிரிவினை வளர்க்கிற சிந்தனையின் பக்கமே போய்விடாதீர்கள்.
அந்த சிந்தனை உங்களையோ இல்லை, உங்கள் மனதையோ தொந்தரவு செய்யும் அளவுக்கு அதை அனுமதிக்கவே அனுமதிக்காதீர்கள்.
விவசாயிகள் என்ன சாதி மதம் பார்த்த பொருளை விளைய வைக்கிறார்கள்?. தொழிலாளர்கள் என்ன சாதி மதம் பார்த்தா?
பொருளுக்கான உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். இவ்வளவு ஏன் இயற்கை அம்சங்களான வெயில், மழையில் சாதி இருக்கிறதா?.
இந்த போதைப் பொருட்களை எப்படி நாம் அறவே ஒதுக்கி வைக்கிறோமோ, அதே மாதிரி இந்த சாதி, மதத்தையும் கண்டிப்பாகத் தூரமாக எவ்வளவுக்கு எவ்வளவு தூரம் தூரமாக அதை ஒதுக்கி வைக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தூரமாக ஒதுக்கி வைத்து விடுங்கள்.
அதுதான் எல்லாத்துக்கும் எல்லாருக்குமே நல்லது. மிகச் சமீபத்தில் பார்த்தீர்கள் என்றால் தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்தார்கள். ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்வில் கூட சாதி சாயம் பூசுவது மாதிரி ஒரு கேள்வி ஒன்று கேட்டு வைத்திருந்தார்கள்.
இதையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த உலகத்தில் எது சரி எது தவறு அப்படி என்று பகுத்தறிந்து பார்த்தாலே போதும். ஒரு குழப்பம் இல்லாத ஒரு தெளிவான ஒரு வாழ்க்கை ஒன்றை வாழலாம். எதற்கும் ரொம்ப எமோஷனல்ல்லாம் ஆகாதீர்கள். அவ்வளவு வருத்தம் எல்லாம் இல்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் யோசியுங்கள்.
ஏனென்றால் வரப்போகும் வருடங்களில்.... சாரி ஏற்கனவே இந்த ஏ.ஐ. (ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ்) உலகத்தை எதிர்கொள்வதற்கு அதுதான் ஒரே வழி. எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா?. எவ்வளவோ பாத்துட்டோம். இதைப் பார்க்க மாட்டோமா? அப்படி என்ற அந்த நேர்மறை சிந்தனையோடு வாழ்க்கையில் பயணம் செய்யுங்கள்.
0 Comments