Ad Code

Responsive Advertisement

பட்டுப்புடவை பராமரிப்பு - டிப்ஸ் இதோ!

 




என்ன தான் பலவிதமான ஆடைகள் அறிமுகமானாலும், இன்றும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சியில் பட்டுப் புடவை அணிந்த பெண்களே அதிகம் காணப்படுவார்கள். அணிவதற்கு அழகாக இருந்தாலும், அதனை பராமரிப்பது என்பது சற்று சவாலான ஒன்று தான். கறையாகிவிட்டது என வீட்டில் துவைத்தால் சாயம் நீங்கி புடவையின் பொலிவு நீங்குகிறது. இதுவே, ட்ரை க்ளினிங் கொடுத்தால் பலருக்கும் பணம் கட்டுப்படியாக இருப்பது இல்லை. அந்த வகையில், பட்டுப்புடவையில் சாயம் போகாமல் தன்மை மாறாமல் எப்படி பக்குவமாக சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது என்பதை பார்ப்போம்.


பராமரிப்பது தான் முக்கியம்: 

புடவையை சுத்தம் செய்வதற்கு முன், அதனை முறையாக பராமரிப்பது அவசியம். பட்டுப் புடவைகளை பராமரிப்பது தனி கலை என்கின்றனர் பலர். கடையில் இருந்து ஆசை ஆசையாய் வாங்கி வந்த பட்டு புடவையை, ஒரு முறை உடுத்தி அழகு பார்த்து, அதனை மடித்து பீரோவில் அடுக்கிவைத்துவிடுகிறோம். இது சரியான முறைதானா? என்றால், கண்டிப்பாக இல்லை என்பதே பதில்.


ஒன்றின் மேல் ஒன்றாக வைக்காதீர்கள்: 

ஒரு புடவையின் மேல் மற்றொரு பட்டுப் புடவையை வைத்தல், உராய்வு ஏற்பட்டு துணியின் தன்மை மோசமாகிவிடும். அதனால், புடவையை முறையாக மடித்து மஞ்சப்பையில் வைத்து பீரோவில் அடுக்கி வைக்க வேண்டும். மஞ்சள் பை இல்லை என்றால், காட்டன் துணிப்பையில், உங்கள் பட்டுப்புடவைகளை வைத்து, தாரளமாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கலாம். இப்படி செய்வதால் பட்டு புடவை நீண்ட காலங்களுக்கு பளபளவென்று இருக்கும்.


ஒரு நிகழ்ச்சிக்கு புடவையை அணிந்து சென்று வீட்டிற்கு வந்ததும், பெரும்பாலானோர் அதனை உடனடியாக மடித்து வைத்துவிடுகின்றனர். இது புடவை பராமரிப்பில் நாம் செய்யும் முக்கியமான தவறாகும். என்ன செய்ய வேண்டும் என்றால், புடவையை நான்காக மடித்து காற்று உள்ள இடத்தில் காய போட வேண்டும். 4 முதல் 5 மணி நேரத்திற்கு மேல், புடவையும், ஜாக்கெட்டும் காய்ந்ததுக்கு பின் மடித்து வைக்க வேண்டும்.


பட்டுப்புடவையில் கறை இருந்தால் என்ன செய்வது? : 

கல்யாணம் அல்லது கோயிலுக்கு என அணிந்து செல்லும் புடவையில் சில சமயங்களில் கறை படிவது இயல்பு தான். அப்படி உங்கள் பட்டுப்புடவையிலும் கறை இருந்தால், உடனடியாக ட்ரை வாஸிற்கு கொடுக்க கூடாது. குறிப்பாக, பட்டுப்புடவையை அடிக்கடி துவைக்க கூடாது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.


கறை இருக்கும் பகுதியில் வெட் டிஸ்யூ (Wet Tissue) பயன்படுத்தி லேசாக துடைத்தாலே கறை நீங்கிவிடும். அழுத்தி தேய்த்தால் சாயம் போவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுவே, எண்ணெய் கறையாக இருந்தால், கொஞ்சமாக பவுடர் அல்லது விபூதி சேர்த்து சாதரண டிஸ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணியை பயன்படுத்தி துடைக்கலாம். கடலைமாவு மற்றும் பச்சைபயறு மாவும் எண்ணெய் கறையை நீக்க பயன்படுகிறது. இதுவே, நீக்க முடியாத எண்ணெய் கறையாக இருந்தால், ட்ரை கிளினிங் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.


வீட்டில் துவைக்கலாமா?: 

வீட்டில் பட்டுப்புடவையை துவைப்பதாக இருந்தால், முந்தி தனியாக, உடம்பு தனியாக துவைக்க வேண்டும். அதிலும், புடவை துவைப்பதற்கு பயன்படுத்தும் பவுடர்கள் மற்றும் லிக்விட்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக, ரசாயணம் குறைவாக உள்ள பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், சந்தையில் பட்டுப்புடவையை துவைப்பதற்கு என பல பொருட்கள் கிடைக்கின்றது. அவற்றை பயன்படுத்தலாம். பட்டுப்புடவைகளை சாமர்த்தியமாக துவைக்க வேண்டும் என்பதால், அனுபவம் இருந்தால் மட்டுமே வீட்டில் துவைக்க பரிந்துரைக்கப்படுகிறது.


பிழிய கூடாது!: 

பட்டுப்புடவைகளை துவைக்கும் போது, ஒரு போதும் பிழிய கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரில் நனைத்து அப்படியே காய வைத்து, உலர்ந்த பின் அயர்ன் செய்து மடித்து வைக்கவும்.


6 மாதத்திற்கு ஒரு முறை


பலரது வீடுகளில், பீரோக்களில் உள்ள அடுக்குகளில், பல ஆண்டுகளாக பட்டுப்புடவை வைதத இடத்திலேயே இருக்கும். இப்படி வைத்திருப்பது பட்டுப்புடவையின் நிலமையை மோசமாகிவிடும். அதனால், ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை புடவை மடிப்பை மாற்றி, மடித்து வைக்க வேண்டும்.


ஏன் என்றால்?

ஒரு புடவையை மடித்து வைத்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு பின் எடுத்தால், புடவையில் உள்ள மடிப்பு நிரந்தர கோடாக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல், சில நேரங்களில் கிழிந்து போவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இதனால், 6 மாதத்திற்கு ஒரு முறை பட்டுப்புடவையை எடுத்து, நன்கு உதறி, எந்த பக்கம் மடித்து வைத்துள்ளோமோ அதன் எதிர் பக்கமாக மடித்து, துணிபையில் வைக்க வேண்டும். பட்டுப்புடவைகள பயன்படுத்துகிறோமோ இல்லையோ பராமரிப்பது மிகவும் அவசியம்.


காயவைப்பது எப்படி?: 

உடுத்திய துணியை காய வைக்க வேண்டும் என வெயில் காய வைக்க கூடாது. இப்படி செய்தால், புடவையின் நிறம் மங்கிவிடும். அதனால், நிழலில் காயவைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.


சுருட்டி வையுங்கள்: 

அனைத்து பட்டுப்புடவைகளையும் மடித்து வைக்க கூடாது. குறிப்பாக, பனாரஸ் போன்ற பட்டுப்புடவைகளை சுருட்டி வைக்க வேண்டும். அதனால், ஒவ்வொரு முறையும் பட்டுப்புடவைகளை வாங்கும் போது, கடைகாரர்களிடம், புடவையை எப்படி பராமரிப்பது என்பதை தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


வெள்ளி ஜரிகை! : 

வெள்ளி ஜரிகை உள்ள பட்டுப்புடவைகளை, ஜரிகை உள்புறத்தில் இருப்பது போல மடித்து வைக்க வேண்டும். ஆசைப்பட்டு, அதிகம் செலவு செய்து வாங்கும் பட்டுப்புடவையை பராமரிப்பதும் கஷ்டம் தான். இப்படி மேலே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி, உங்கள் பட்டுப்புடவையை பராமரித்தால் “ எப்போ எடுத்த புடவை இன்னும் பளபளன்னு இருக்குது’ என பெருமையாக செல்லிக்கொள்ளலாம்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement