ஞாபக மறதி பிரச்சினையால் முதியவர்கள் மட்டுமின்றி இளைய தலையினரும் அவதிப்படுகிறார்கள். முக்கியமான விஷயங்களை கூட சட்டென்று நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். ஏன், காய்கறி கடைக்கு சென்று 6 காய்கறிகளை வாங்கி வரச்சொன்னால், கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு பொருட்களை மறந்து விடுவோம் அல்லது குழப்பம் ஏற்படும். சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கி முக்கியமான விஷயங்களில் பலவற்றை மறக்கும் நாம், நினைவாற்றலை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நன்றாக தூங்குங்கள்: நினைவாற்றல் திறனை ஒருங்கிணைப்பதற்கு தூக்கம் அவசியமானது. அறிவாற்றலை மேம்படுத்தவும், மூளையை புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கவும், தினசரி நிம்மதியான 7 மணி நேரம் தூக்கம் அவசியம்.
கற்றுக்கொண்டே இருங்கள்: பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்ற பிறகு, இனி கற்றுக்கொள்வதற்கு என்ன இருக்கிறது? என்ற மனநிலை பலருக்கும் இருக்கிறது. அந்த மனநிலையை தூக்கி எறிந்து, வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். மாறும் காலகட்டத்திற்கு ஏற்ப உங்களை மெருகேற்றிக்கொள்ள கற்றல் மட்டுமே கைகொடுக்கும்.
கற்றல் ஆர்வம் மூளையின் செயல்பாடுகளை தூண்டி மனதை கூர்மையாக வைத்திருக்க உதவுவதோடு, அறிவாற்றல் திறனையும் அதிகரிக்க செய்கிறது என்கிறது ஹார்வேர்டு ஹெல்த் இதழ். புதிய விஷயங்கள் கற்றுக்கொள்வதால் என்ன பலன் என்று கற்றுக்கொள்ள தயாங்காதீர்கள். நீங்கள் இன்று கற்கும் ஒரு விஷயம் பல ஆண்டுகளுக்கு பின் கூட ஏதோ ஒரு வகையில் நிச்சயமாக உதவும்.
அனைத்து புலன்களை பயன்படுத்துங்கள்: நீங்கள் ஏதாவது ஒன்றைக் கற்றுகொள்வதில் அதிக புலன்களை பயன்படுத்தினால் உங்கள் மூளையின் பகுதி நினைவாற்றலைத் தக்கவைத்துக்கொள்வதில் அதிக ஈடுபாடு கொள்ளும். உதாரணத்திற்கு, உணவகத்தில் புதிய உணவை உட்கொள்ளும் போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை ருசித்து கண்டுபிடிப்பதை விட நறுமணத்தை வைத்து கண்டுபிடிக்க முயற்சியுங்கள். இந்த செயலில் இரண்டு புலன்கள் பயன்படுத்தப்படுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
உடற்பயிற்சியை தவிர்க்காதீர்கள்: தினசரி உடற்பயிற்சி போன்ற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், மூளையின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். இதயத்தை பம்ப் செய்ய தூண்டும் பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள். நீச்சல், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உடற்பயிற்சி செய்ய போதிய நேரம் இல்லை என நினைப்பவர்கள் நடைப்பயிற்சியாவது தினமும் செய்யுங்கள்.
ஆரோக்கியமான உணவுகளில் கவனம் செலுத்துங்கள்: மூளை ஆரோக்கியத்திற்கும் நினைவாற்றலை மெருகேற்றுவதற்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். காய்கறிகள், பழங்கள், மெலிந்த புரதங்கள், மீன்கள், முழு தானியங்கள் உள்ளிட்டவை மூளையின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இவை மூளை ஆரோக்கியத்திற்கு பங்களித்தால், சில உணவுகள் கேடு விளைவித்து வயதாகும் போது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் மூளையின் செயல்பாட்டிற்கு எதிரானவை. எனவே, இவற்றை தவிர்ப்பது நல்லது.
மன அழுத்தத்தை நிர்வகியுங்கள்: யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் மூலம் மன அழுத்தத்தை நிர்வகியுங்கள். எந்த ஒரு செயலிலும் தொடர்ந்து ஈடுபடுவதையோ அல்லது ஒரே சமயத்தில் பல பணிகளை மேற்கொள்வதையோ தவிருங்கள். குறிப்பிட்ட நேரம் இடைவெளி எடுத்துக்கொள்வது முக்கியமானது. ஒரு விஷயத்தை பதற்றத்துடன் அல்லது மன அழுத்தத்துடன் எதிர்கொண்டால் நிச்சயமாக நினைவில் தங்காது. எனவே, நினைவாற்றல் மற்றும் மன தெளிவை பாதுகாக்கும் வகையில், கவனம் செலுத்துங்கள்.
சுறுசுறுப்பாக இருங்கள்: செஸ் விளையாட்டு, புதிர் கணக்குகள் என மூளைக்கு சவால் விடும் செயல்பாடுகளுக்கு சில நிமிடங்களையாவது செலவிட வேண்டும். புதிய தனித்திறன்களை கற்றுகொள்வது, வாசிப்பு பழக்கத்தை பின்பற்றுவது, மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கச் செய்யும் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் மூளை சுறுசுறுப்பை தக்க வைக்கலாம்.
0 Comments