ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு, 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. நவ., 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
தற்போது 120 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களுக்கு செல்வதற்கு, முன்னரே திட்டமிடவும், முன்பதிவு செய்யவும் இது நல்ல வாய்ப்பாக இருந்தது. அந்த கால வரம்பை 120 நாட்களில் இருந்து, 60 நாட்களாக குறைத்து ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மண்டல முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு, ரயில்வே நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ரயில்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாட்களில் இருந்து, 60 நாட்களாக குறைக்கப்படுகிறது. இது, நவம்பர் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. வரும் 31ம் தேதி வரையான நாட்களில் பயணம் செய்ய, பழைய முறைப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அந்த முன்பதிவுகள் அப்படியே இருக்கும்.
பகல் நேர விரைவு ரயில்களான 'லைம் தாஜ், கோம்தி'யில் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணியர், 365 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்ற வரம்பில் எந்த மாற்றமும் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்னரே, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியால், டிக்கெட் ரத்து செய்வது அதிகமாகி வருகிறது. அதாவது வழக்கமானதை விட, 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி, தனியார் ஏஜன்சிகள் முறைகேடுகள் செய்கின்றன. 60 நாட்களாக குறைத்திருப்பது பயணியருக்கு வசதியாக இருக்கும்' என்றனர்.
பயணியருக்கு ஏமாற்றம்
தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன் கூறியதாவது:
திருமணம், பண்டிகை நாட்களுக்கு முன்னரே திட்டமிடும் பயணியருக்கு இந்த மாற்றம், ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தேவை அதிகரிக்கும்போது, கடைசி நேரத்தில் அதிக கட்டணத்தில் சிறப்பு ரயில்களாக இயக்கவே, இந்த மாற்றத்தை ரயில்வே செய்துள்ளதா என்ற சந்தேகம் உள்ளது. எனவே, பழைய முறையே மீண்டும் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments