சின்னசேலம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகர் ஜீவா, அவரது மனைவி, பைக் ஓட்டி வந்த வாலிபர் ஆகியோர் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து நடிகர் ஜீவாவும், அவரது மனைவியும் நேற்று சேலம் நோக்கி காரில் சென்றனர். சின்னசேலம் புறவழிச்சாலை அம்மையகரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் பைக்கில் திடீரென சாலை குறுக்கே சென்றார்.
இதை பார்த்த நடிகர் ஜீவா வாலிபர் மீது மோதாமல் இருக்க காரை வலது பக்கமாக திருப்பினார்.
அப்போது மணிகண்டன் வந்த பைக் மீது மோதி அங்கிருந்த தடுப்பு கட்டையில் மோதி கார் நின்றது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதமானது. இந்த விபத்தில் நடிகர் ஜீவா, அவரது மனைவி மற்றும் பைக்கில் வந்த மணிகண்டன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து நடிகர் ஜீவா, அவரது மனைவி ஆகிய இருவரும் உடனடியாக மாற்று கார் ஏற்பாடு செய்து அதன் மூலம் சேலம் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மணிகண்டன் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கிய காரை மீட்டு சின்னசேலம் காவல்நிலையத்துக்கு எடுத்து வந்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments