2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். அவர் தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார். அது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதே சமயம், நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி அது குறித்து மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
அது குறித்து அவரது தாயார் சரோஜ் தேவி பேசுகையில், தன் மகன் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் தன் மகனைப் போன்றவர் எனவும் தெரிவித்தார். அதன் மூலம் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வெல்லாதது ஏமாற்றம் அளிக்கவில்லை என்பதை உணர்த்தினார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் வீசி இருந்த நிலையில், அர்ஷத் நதீம் 92.97 தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த நிலையில் அது குறித்து நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய அவர், "நீரஜ் வெள்ளி பதக்கம் வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்கப் பதக்கம் வென்ற அந்த வீரரும் (அர்ஷத் நதீம்) எனது குழந்தை தான். அங்கு செல்லும் அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள். நீரஜ் சோப்ரா வீட்டுக்கு வந்தவுடன் அவருக்கு விருப்பமான உணவை நான் சமைத்து கொடுப்பேன்." என்றார் சரோஜ் தேவி.
சில இந்திய ரசிகர்கள் அர்ஷத் நதீமுக்கு எதிரான கருத்துக்களை கூறி வரும் நிலையில் நீரஜ் சோப்ராவின் தாய், அவரை தனது குழந்தை என சொல்லி இருப்பதை பலரும் சுட்டிக்காட்டி அவரை பாராட்டி வருகின்றனர். நீரஜ் சோப்ரா இதுவரை ஈட்டி எறிதலில் 90 மீட்டர் என்ற மைல் கல்லை கடந்து வீசியதில்லை.
அதே சமயம் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் இதற்கு முன்பே ஒரு முறை 90 மீட்டருக்கும் அதிகமான தூரம் வீசி இருந்தார். 2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அவர் 90.18 தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்று இருந்தார். தற்போது அதையும் தாண்டி 92.97 தூரம் வீசி ஒலிம்பிக் சாதனை படைத்து இருக்கிறார்.
0 Comments