ஒலிம்பிக் போட்டியில் எடை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அந்தந்த வீரர், வீராங்கனைகளே முழு பொறுப்பு என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடந்த ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தத் தொடரில் இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் 71வது இடத்தை பிடித்துள்ளது.
நழுவிய வாய்ப்பு
இந்த ஒலிம்பிக்கில் 50 கிலோ மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது.
குற்றச்சாட்டு
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அதிருப்தியடைந்த இந்திய ரசிகர்கள், மருத்துவக் குழுவினர் தான் பொறுப்பு என்றும், ஒலிம்பிக் போன்ற பெரிய தொடர்களில், வீரர்களின் எடை விவகாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டாமா? என்று எல்லாம் கேள்வி எழுப்பி வந்தனர்.
வீரரே பொறுப்பு
இந்த நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை மற்றும் ஜுடோ போன்ற விளையாட்டுகளில் போட்டியாளர்களின் எடை விவகாரத்தில் அந்தந்த போட்டியாளரும், பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது.
ஒவ்வொரு விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உதவுவதற்கு என்று தனிக்குழு இருப்பார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக இணைந்து செயல்படுவார்கள். ஆனால், இந்திய ஒலிம்பிக் குழு, ஒலிம்பிக் தொடங்குவதற்கு இரு மாதங்களுக்கு முன்புதான், வீரர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். அதுவும், போட்டியின் போதோ அல்லது போட்டிக்குப் பிறகோ, வீரருக்கு ஏற்படும் காயம் உள்ளிட்ட பிரச்னைகளை கவனித்துக் கொள்வார்கள்.
கூடுதல் உதவி தான்
மேலும், ஊட்டச்சத்து நிபுணர், பிஸியோதெரபிஸ்ட் இல்லாத வீரர்களுக்கு, அந்தப் பணிகளையும் கூடுதலாக இந்த மருத்துவக் குழு செய்யும். எனவே, வினேஷ் போகத் விவகாரத்தில் தின்ஷா பர்திவாலா தலைமையிலான மருத்துவக் குழுவை குறை சொல்வது நியாயமல்ல, எனக் கூறினார்.
13ல் தீர்ப்பு
தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது விளையாட்டு போட்டிகளுக்கான தீர்ப்பாயம் நாளை (ஆக.,13) தீர்ப்பு அளிக்க இருக்கிறது.
0 Comments