துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஜுலை 2024 ஆம் மாதத்தில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ் நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருள்கள் இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் தமிழ்நாடு அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது.
மக்களவைத் தேர்தல் சமயத்தில் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்கள் விநியோகிக்கப்படாமல் இருந்தது. அதற்கடுத்த மாதங்களில் அவை சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன்படி துவரம் பருப்பு, பாமாயில் விநியோகிக்கப்படுகிறது.
ஜுன் 2024 ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜுன் 2024ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜுலை 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஜுன் 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுலை 2024ஆம் மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஜுலை 2024ஆம் மாதத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருட்கள் முழுமையாக நுகர்வு செய்யப்படாத காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களால் ஜுலை 2024ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை.
ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜுலை 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜுலை 2024 ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments