Ad Code

Responsive Advertisement

கல்வி, அரசு பணியில் 10.5 சதவீதத்திற்கு மேல் வன்னியர் சமூகம் பலன் பெற்றுள்ளனர் - RTI தகவல்

 

கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில், 10.50 சதவீதத்திற்கும் மேல், வன்னியர் சமூகம் பலன் பெற்றிருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.


வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வன்னியர் சங்கமும், பா.ம.க.,வும் நீண்ட காலமாக போராடி வருகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில், 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான- எம்.பி.சி.,க்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வன்னியர் 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கு தடை விதித்தது. இந்த தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், 'ஒரு சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு வழங்கும்போது, அதற்கான சரியான, நியாயமான தரவுகளை மாநில அரசு தர வேண்டும்' என்றது.


அதைத் தொடர்ந்து, வன்னியர் இடஒதுக்கீடு பற்றி பரிந்துரைக்க, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை, தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதற்காக ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு, மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'வன்னியர்களால் வளர்ந்த தி.மு.க., இப்போது, வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம், வன்மத்தால் உள் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது. தி.மு.க.,வின் இந்த நாடகங்களை பாட்டாளி மக்கள் நன்கறிவர். காலம் வரும்போது சமூக நீதிக்கு எதிரான, நன்றி மறந்த தி.மு.க.,வுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவர்' என எச்சரித்தார்.


கல்வி, வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு உரிய பிரதிநித்துவம் கிடைக்கவில்லை என பா.ம.க., தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், சென்னை, அயனப்பாக்கத்தில் உள்ள கொண்டயன்கோட்டை மறவர் சங்கத்தை சேர்ந்த பி.பொன்பாண்டியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்ட கேள்விகளுக்கு, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை பதிலளித்துள்ளது.


அதில், அரசு உயர் கல்வி நிறுவனங்கள், அரசு வேலைவாய்ப்புகளில், எம்.பி.சி.,க்கான 20 சதவீத ஒதுக்கீட்டிலும், பொதுப்பிரிவிலும், வன்னியர் சமுதாயம், 10.50 சதவீதத்திற்கும் அதிகமாக பலன் பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.


அதன் விபரம்:


* கடந்த 2018 முதல் 2022 வரை, ஐந்து ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு தேர்வு பெற்ற 24,330 மாணவர்களில், 3,354 பேர், அதாவது 13.8 சதவீதம் பேர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்


* முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேர்வு பெற்ற 6,966 மாணவர்களில், 940 பேர் அதாவது 13.5 சதவீதம் பேர் வன்னியர்கள்


* இளநிலை பல் மருத்துவ படிப்பான பி.டி.எஸ்.,க்கு தேர்வான 6,234 மாணவர்களில், 668 பேர், அதாவது 10.7 சதவீதம் வன்னியர்கள். எம்.டி.எஸ்., மேல்படிப்புக்கு தேர்வான 751 மாணவர்களில், 84 பேர், அதாவது 11.2 சதவீதம் வன்னியர்கள்.


* கடந்த 2018 முதல் 2022 வரை ஐந்து ஆண்டுகளில், கால்நடை அறிவியல் படிப்புகளில் 16.5 சதவீதம்; தமிழக அரசு சட்ட கல்லுாரிகளில் 11.7 சதவீதம்; அம்பேத்கர் சட்ட பல்கலையில் 16.3 சதவீதம்; இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்து படிப்புகளில் 9.1 சதவீதம் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைத்துள்ளன.


அரசு வேலைவாய்ப்புகள்:


போலீஸ் எஸ்.ஐ., பணியில் 17 சதவீதம்; உதவி மருத்துவர் 17.1; முதுநிலை ஆசிரியர்கள் 17.5; வனப் பணியாளர் 20.2; டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 பணிகளில் 13.6; குரூப் 3 பணிகளில் 23.5; குரூப் 4 பணிகளில் 19.5; ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் 14.4; துணை கலெக்டர்களில் 11.6 சதவீதம் பேர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.



படிப்புகள்/ மொத்த இடங்கள்/- வன்னியர்கள்/- சதவீதம்


எம்.பி.பி.எஸ்., - - 24,330 -- 3,354 -- 13.8

எம்.டி., - - 6,966 - - 940 - - 13.5

பி.டி.எஸ்., - - 6,234 -- 668 - - 10.7

எம்.டி.எஸ்., - - 751 -- 84 -- 11.2

கால்நடை அறிவியல் -- 2,820 - - 464 -- 16.5

அரசு சட்ட கல்லுாரிகள் -- 17,990 -- 2,096 - - 11.7

அம்பேத்கர் சட்ட பல்கலை -- 2,948 -- 481 -- 16.3

இந்திய மருத்துவம் - ஓமியோபதி -- 8,412 -- 768 -- 9.1







Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement