Ad Code

Responsive Advertisement

சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ADGP பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5-ம் தேதி இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தவே ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக வாழ்வார்கள் என எதிர்க்கட்சிகள், தி.மு.க அரசைச் சாடின.




அதோடு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இன்னொருபக்கம், இந்தச் சம்பவத்தில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் 8 பேர் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இந்த நிலையில் மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, சென்னை மாநகர காவல் ஆணையராக செயல்பட்டுவந்த சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.


உத்தரவின்படி, காவலர் பயிற்சி கல்லூரியின் டி.ஜி.பி-யாக சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதோடு, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக கூடுதல் பொறுப்பும் சந்தீப் ராய் ரத்தோருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.




அதேசமயம், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக செயல்பட்டுவந்த அருண், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக டேவிட்சன் ஆசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement