''பிரதமரின் 'தேக்கோ அப்னாதேஷ்' என்ற திட்டத்தின் கீழ், இந்த நிதி ஆண்டில், ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், 70 சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என, அதன் தென் மண்டல பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், கல்வி சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா உட்பட பல்வேறு சிறப்பு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின், தேக்கோ அப்னாதேஷ் என்ற திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில், 70 உள்நாட்டு சுற்றுலாக்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், 57 உள்நாட்டு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
தென் மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பாகவும், வசதியாகவும், கயாவில் அமாவாசை அன்று பிண்ட தானம் கொடுக்க, ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு செய்து கொடுக்கிறது. கயா, காசி, அலகாபாத், அயோத்தியா சிறப்பு ஆன்மிக யாத்திரை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் அழைத்து செல்லப்படுகின்றனர்.
செர்ரி ப்ளாஸம் பருவத்தில் ஜப்பான்; வசந்த காலத்தில் கிழக்கு ஐரோப்பா, கம்போடியா-வின் அங்கோர் வாட் போன்ற 20க்கும் மேற்பட்ட சுற்றுலாக்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், ஊட்டி, கொடைக்கானல், மதுரை, -ராமேஸ்வரம், கன்னியாகுமரி-, திருவனந்தபுரம், போடி, மூணாறு,- தேக்கடி போன்ற இடங்களுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. நவகிரக கோவில்கள், சபரிமலை போன்ற ஆன்மிக தலங்களுக்கும், பக்தர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா தொடர்பான மேலும் விவரங்களுக்கு, 90031 40680, 90031 40682 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு ராஜலிங்கம் பாசு தெரிவித்தார்.
0 Comments