கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 661 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
இவா்களில் 21 போ் பட்டியல் பிரிவினா் (எஸ்.சி.) என்றும், 12 போ் பழங்குடி பிரிவினா் (எஸ்.டி.) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
கடந்த 2018 முதல் நடப்பாண்டு ஜூலை 22 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 661 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 21 போ் எஸ்.சி. பிரிவைச் சோ்ந்தவா்கள். 12 போ் எஸ்.டி. பிரிவையும், 78 போ் ஓபிசி பிரிவையும் (இதர பிற்படுத்தப்பட்டோா்), 499 போ் பொதுப் பிரிவையும் சோ்ந்தவா்கள்.
நீதிபதிகள் நியமனத்துக்கான அரசமைப்புச் சட்ட விதிமுறைகளானது, எந்தவொரு ஜாதியினா் அல்லது வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை. எனினும், கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து உயா்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்படுவோரிடம் இருந்து உரிய வழிமுறையின்படி அவா்களின் சமூக பின்னணி விவரங்கள் பெறப்படுகின்றன.
நாட்டிலுள்ள உயா்நீதிமன்றங்களில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த 2014-இல் 906-ஆக இருந்தது. தற்போது இது 1,114-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-இல் இருந்து இதுவரை 976 உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாவட்ட நீதித்துறையைப் பொருத்தவரை, நீதித்துறை அதிகாரிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 19,518-இல் இருந்து 25,523-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-இல் இருந்து இதுவரை 62 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம், ஓய்வூதியம், படிகள் கடந்த 2016-ஆம் ஆண்டில் கடைசியாக திருத்தியமைக்கப்பட்டன. நீதிபதிகளின் ஊதியத்தை உயா்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இப்போது இல்லை என்று தனது பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
0 Comments