Ad Code

Responsive Advertisement

மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு: இந்திய கம்யூ

 




 'இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன் தள்ளுபடி, கட்டப் பஞ்சாயத்திற்கு தடை, மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் எஸ்.சி., இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற, இந்திய கம்யூனிஸ்ட் குரல் கொடுக்கும்' என, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னையில் நேற்று வெளியிட்டார். அதை, கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் வெங்கடாசலம் பெற்றுக்கொண்டார். மாநில செயலர் முத்தரசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:


 அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் லாபகரமான கொள்முதல் விலை கிடைப்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்படும். விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்


 ஆணவக் கொலை, கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க சட்டம் இயற்றப்படும்


 மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் எஸ்.சி., இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்


 அனைத்து பயிர்களையும் உள்ளடக்கிய பயிர் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, தாமதமின்றி இழப்பீடு வழங்கப்படும்


 அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய, பகத் சிங் பெயரில் தேசிய வேலை உறுதிச் சட்டம் கொண்டு வரப்படும். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தேசிய இளைஞர் கொள்கை உருவாக்கப்படும்


 பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, விரைவு நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்


 வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்


 பிளஸ் 2 வகுப்பு வரை இலவச கல்வி


 தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., மத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமாகச் செயல்படுவது உறுதி செய்யப்படும்.


இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பின்னர் பேட்டியளித்த முத்தரசன், ''லோக்சபா தேர்தலில் வென்று, இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போது, எங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியுடன் போராடுவோம்.


''தேர்தல் நேரத்திலும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்,'' என்றார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement