பணியின்போது அலட்சியமாக இருந்த 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களை சஸ்பெண்ட் செய்து தஞ்சாவூர் சரக டிஐஜி நேற்று உத்தரவிட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் கடந்த 27ம்தேதி பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நடைபயண பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அப்போது பப்ளிக் ஆபிஸ் சாலையில் பாஜவில் இணைவதற்காக ‘மிஸ்டுகால்’ கொடுத்து உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பப்ளிக் ஆபீஸ் சாலையில் வெளிப்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் பாஜ நிர்வாகிகளிடம் எந்த நம்பருக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்தால் உறுப்பினராக சேர முடியும் என கேட்டுக்கொண்டு இருந்தனர்.
இதை அப்பகுதியில் இருந்த சிலர், வீடியோவாக எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இருவரும் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து விசாரணை அறிக்கை தஞ்சாவூர் சரக டிஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து 2 பேரிடம் டிஐஜி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு, பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்ததோடு, பாஜவில் உறுப்பினராக சேருவதற்கு தங்களது செல்போனில் இருந்து ‘மிஸ்டு கால்’ கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து டிஐஜி ஜெயச்சந்திரன் நேற்று உத்தரவிட்டார்.
0 Comments