Ad Code

Responsive Advertisement

விஜய் சேதுபதியின் “மேரி கிறிஸ்துமஸ்” படத்தின் விமர்சனம்

 



ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “மேரி கிறிஸ்துமஸ்”(Merry Christmas). ஹீரோவாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக கத்ரீனா கைஃப்பும் நடித்துள்ள இப்படம் தமிழ், இந்தி என இருமொழிகளில் எடுக்கபட்டுள்ளது. இதில் தமிழ் வெர்ஷனில் இவர்கள் இருவரையும் தவிர்த்து ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முக ராஜன், காயத்ரி, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ப்ரீதம் இசையும், மது நீலகண்டன் ஒளிப்பதிவும் செய்துள்ள மேரி கிறிஸ்துமஸ் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம். 


படத்தின் கதை 

ஒரு கிறிஸ்துமஸ் இரவில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் கதை தான் “மேரி கிறிஸ்துமஸ்”. 


கிறிஸ்துமஸ் விழாவுக்கு முந்தைய நாள் துபாயில் இருந்து வரும் மும்பைக்கு வரும் சிவில் இன்ஜினியரான ஆல்பர்ட் ஹோட்டல் ஒன்றில் தனது வாய் பேசாத மகளுடன் இருக்கும் மரியாவை சந்திக்கிறார். கணவருடனான பிரச்சினையில் இருந்து தப்பிக்க துணை தேடும் மரியா ஆல்பர்ட் உடன் நேரத்தை செலவிட நினைக்கிறார். இதனிடையே மகளை வீட்டில் தூங்க வைத்துவிட்டு வெளியே மகிழ்ச்சியாக இருவரும் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் வீட்டில் மரியாவின் கணவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.  


சரி.. போலீசுக்கு போன் செய்யலாம் என அவர் சொல்லும்போது அங்கிருந்து தான் உடனே செல்ல வேண்டும் என ஆல்பர்ட் தப்ப நினைக்கிறார். மேலும் தான் ஒரு சிவில் இன்ஜினியர் இல்லை என்ற அதிர்ச்சி தகவலையும் போட்டுடைக்கிறார். இதற்கிடையில் இந்த விவகாரம் ஒரு வழியாக போலீஸ் விசாரணைக்கு செல்கிறது. கொலை மற்றும் தற்கொலை என்ற பாணியில் விசாரணை நடைபெறுகிறது. இதில் ஆல்பர்ட் யார்? மரியாவின் கணவரை கொலை செய்தவர் யார்? .. அதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு  விடை கிடைத்ததா என்பதே “மேரி கிறிஸ்துமஸ்” படத்தின் மீதி கதையாகும். 


நடிப்பு எப்படி? 

இரண்டு மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை மிகவும் குறைவான கேரக்டர்களே தாங்கி பிடித்துள்ளார்கள். குறிப்பாக ஆரம்பம் தொடங்கி இறுதி வரை ஆல்பர்ட் ஆக விஜய் சேதுபதியும், மரியாவாக வரும் கத்ரீனா கைஃப் இருவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். முதலாளி மனைவியுடனான தொடர்பில் இருக்கும் விஜய் சேதுபதி, கணவரை பழிவாங்க வேறு நபருடன் டேட்டிங் செல்ல நினைக்கும் கத்ரீனா இருவரும் சமூகத்தில் இருந்து சற்று விலக்கியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள். 


மேலும் தமிழ் வெர்ஷனில் போலீஸ் அதிகாரிகளாக பயன்படுத்தப்பட்டுள்ள ராதிகா சரத்குமார், சண்முக ராஜன் இருவரும் வந்த பிறகு படம் வேறு தளத்திற்கு பரிமாற்றம் பெறுகிறது. அதேபோல் கத்ரீனாவின் வாய் அசைவிற்கு ஏற்ற தமிழ் டப்பிங் செய்து ஒரு முழுமையான தமிழ் படம் பார்த்த எண்ணத்தை ஏற்படுத்தி விட்டார்கள். 


படம் தியேட்டரில் பார்க்கலாமா?

பொதுவாக சினிமாவில் க்ரைம் த்ரில்லர் வகை கதையெல்லாம் குற்றம் நடக்கும்போது யார் அதை செய்தார்கள் என்ற விசாரணை ரீதியாகவோ அல்லது செய்த தவறை சம்பந்தப்பட்ட நபர் மறைப்பது எப்படி என்கிற ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் யார் அந்த கொலையை செய்தார்கள் என யூகிக்க முடியாதவாறு காட்சிகள் அனைவர் மீதும் சந்தேகம் எழும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காகவே இப்படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவனுக்கு பாராட்டுகள்.


அதேசமயம் மெதுவாக நகரும் திரைக்கதை, லாஜிக் மீறல்கள், குற்றம் நடந்த நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகள் இருக்கிறதா என்று ஆராயாமல் பழைய விசாரணையை கையிலெடுக்கும் போலீசார்  என  மைனஸ்களும் ஆங்காங்கே தென்படுகின்றன. ஒட்டுமொத்த படத்திலும் இறுதியாக வரும் அந்த 20 நிமிட கிளைமேக்ஸ் காட்சி தான் சிறப்பு என சொல்லும் அளவுக்கு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்றாற்போல் கொடுக்கப்பட்டிருக்கும் ப்ரீதமின் பின்னணி இசை கவிதை தான்..! மது நீலகண்டனின் ஒளிப்பதிவு சிறப்பாக யுகபாரதியின் பாடல்களை காட்சிகளோடு காட்சிகளாக கடத்த உதவியிருக்கிறது. மொத்தத்தில் மேரி கிறிஸ்துமஸ் படம் பொறுமையாக இருந்து ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம்..!



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement