சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மனைவி விசாலாட்சிக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது. இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதால் அவர் பதவி இழப்பார் என தெரிகிறது
கடந்த 2006 - 11ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, உயர் கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். 2011ல் அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், பொன்முடிக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை 2011 செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தது. பொன்முடி மனைவி விசாலாட்சியும், வழக்கில் சேர்க்கப்பட்டார்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கில் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து, 2016 ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, 2017ல் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இந்த வழக்கில் இருவருக்கும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
அதில், இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்வதற்காக இந்த சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார். தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்ததும் பொன்முடியின் மனைவி விசாலாட்சி கண்ணீர் விட்டு அழுதார்.
0 Comments