கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வங்கக்கடலிலும் மோசமான வானிலை நிலவும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் எனவும் எச்சரிக்கை இருப்பதால் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, கடலூர் மீனவர்கள் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை எந்தவித படகின் மூலமாகவும் கடலுக்குள் மீன்படிக்கை செல்லக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மோசமான வானிலை நிலவும் என எச்சரிக்கை தரப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் உத்தரவை பின்பற்ற வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தடையை அடுத்து கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆரஞ்சு அலர்ட் – தயார் நிலையில் மீட்புக் குழு
கடலோர மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். 250 பேர் கொண்ட மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments