தீபாவளி பண்டிகை நவ.12-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது.அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பட்டாசுகளை வெடிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால், பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகளை கடைகளிலும், இணையதளத்தில் ஆர்டர் செய்தும் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், குறைந்த விலையில் தீபாவளி பட்டாசு விற்பதாக கூறி, போலி இணையதளம் மூலம் மோசடி நடைபெறுவதாக அதிக அளவில் புகார்கள் வருவதாகவும், அதனால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், மர்ம நபர்கள் சிலர் போலி இணையதங்களை உருவாக்கி, குறைந்த விலையில் பட்டாசு வழங்குவதாக விளம்பரம் செய்து மோசடி செய்கின்றனர்.
இதுதொடர்பாக மர்ம நபர்கள் யூடியூப்உள்ளிட்ட சமூக வலைதளபக்கத்தில் விளம்பரப்படுத்துகின்றனர். செல்போனில் வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு, வாட்ஸ் அப் மூலம் பட்டாசு ஆர்டரை பெறுகின்றனர். இதற்காக ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு, பின்னர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுகின்றனர்.
இதுபோன்ற மோசடி தொடர்பாக, கடந்த ஒரு மாதத்தில் 25வழக்குகள் பதிவாகி உள்ளன. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த வகையில் பொதுமக்கள் யாரேனும் பணத்தை இழந்திருந்தால், சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
0 Comments