கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி கருக்கா முத்துவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா என்ற வினோத், சர்வசாதாரணமாக நடந்து வந்தே பெட்ரோல் குண்டு வீசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பினான் கருக்கா வினோத். நீட் தேர்வு வேண்டாம் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது. எனவே நீட் தேர்வு விவகாரத்தில் பா.ஜனதாவின் நிலைப்பாடு எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்துதான் பாஜக அலுவலகம் மீது நான் பெட்ரோல் குண்டுகளை வீசினேன் என்று அசால்டாக கூறினார்.
இன்றைய தினம் ஆளுநர் மாளிகையில் குண்டு வீசியது ஏன் என்று கேட்டதற்கு சிறையில் இருந்த போது வெளியே வருவதற்கு ஆளுநர் ஒப்புதல் தராத காரணத்தால் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார். கருக்கா வினோத் சொல்வது உண்மைதானா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பெட்ரோல் குண்டுகளை தயாரிப்பதற்கு கருக்கா வினோத்துக்கு வேறு யாரும் உறுதுணையாக இருந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கருக்கா வினோத் கடந்த 2015ஆம் ஆண்டில் சவுத்போக் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசினான். அப்போது ஒரு அரசியல் கட்சித் தலைவர் மதுக்கடையை மூட வேண்டும் எனப் போராட்டம் நடத்தினார். அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ரூ.200 தான் கொடுத்தார். அதுக்காகவே டாஸ்மாக் கடையில் குண்டை வீசிவிட்டார். இப்போது அந்த மதுக்கடையையும் அங்கிருந்து எடுத்துவிட்டனர்.
இன்னொரு ரவுடி தூண்டுதலின்பேரில், தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் வாசலில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டார். தனிப்படை விசாரணை என்கிற பெயரில் தொந்தரவு கொடுத்த காரணத்தால் போலீஸாரை மிரட்ட, அந்த ரவுடி தூண்டுதலின் பேரில் கருக்கா வினோத் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கூறினார்.
கஞ்சா வாங்கவும் சரக்கு வாங்கவும் காசு கொடுத்தால் போதும், யார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசச் சொன்னாலும் வீசுவான் என்கின்றனர் ஏரியாவாசிகள். இன்றைய தினம் ஆளுநர் மாளிகையில் யாருடைய தூண்டுதலின் பேரில் பெட்ரோல் குண்டு வீசினான் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
0 Comments