மதுரை கோவில்பாப்பாக்குடியில் வாரிசு போல வளர்த்த காளை ராமு 22, இறந்ததால், உரிமையாளர் தீபக் கரகாட்டத்துடன் இறுதிச் சடங்கு செய்தார்.
கரிசல்குளம் தீபக். மாடு பிடி வீரரான இவர், ஜல்லிக்கட்டுகாளைகளையும் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்த ராமு காளை வயது மூப்பால்இறந்தது. மனிதர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது போலவே தப்பாட்டம், கரகாட்டம், பட்டாசுகளுடன் இறுதிச் சடங்கை நடத்தினார்.
இந்தக் காளை நேற்று உடல் நலக்குறைவால் திடீரென இறந்தது. இதனால் வருத்தம் அடைந்த உரிமையாளர் தீபக், வீட்டில் ஒருவர் மறைந்தால் என்ன மாதிரியான துக்கம் அனுசரிக்கப்படுமோ அதை போன்று இறுதி சடங்குகள் செய்தார். மாடு வளர்ந்த கொட்டத்திற்கு வெளியே பந்தலிட்டு சேர்கள் போட்டு, துக்க வீட்டைப் போலவே ஏற்பாடுகள் செய்திருந்தார். மேலும், கரகாட்டம், தப்பாட்டத்திற்கும் ஏற்பாடு செய்ததோடு, சோகப் பாடல்களையும் ஒலிபரப்பினார். பெண்கள், மூதாட்டிகள் ஒப்பாரி வைத்தும் அழுதனர்.
அவரது நண்பர்கள் காளையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிளக்ஸ் பேனர் மற்றும் போஸ்டர்களையும் ஒட்டி இருந்தனர். அவரது உறவினர்கள் மட்டுமின்றி தேனி, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களும், வட மஞ்சுவிரட்டு நடத்தும் ஏற்பாட்டாளர்களும் நேரில் வந்து காளைக்கு மாலை அணிவித்து, வணங்கி மரியாதை செய்தனர்.
உரிமையாளர் தீபக் கூறியதாவது: என் தம்பி ராமுவை, 12 ஆண்டுகளுக்கு முன் வாங்கினேன். அன்று முதல் குடும்பத்தில் ஒருவனாகவே வாழ்ந்தான். 2006 முதல் இதுவரை 60க்கும் மேற்பட்ட போட்டிகளில் பரிசு வாங்கி பெருமை சேர்த்தான். பத்துக்கும் மேற்பட்ட காளைகளை நான் வளர்த்து வந்தாலும், ராமு தான்எனக்கு பெயர் புகழை வாங்கி தந்தான். 22 வயதில் முதுமையால் இறந்தாலும், குடும்ப உறுப்பினர் ஒருவர் இல்லை என்பதைப் போல எனக்கு பெரும் சோகத்தை தருகிறது, என்றார்.
0 Comments