1] கண்களை பார்த்துப் பேசுங்கள்.
கண்களின் வார்த்தைகள் புரிய வேண்டும். நரையும், மூப்பும் கண்களுக்கு இல்லை.
மௌனத்தின் பாஷை கட்டாயம். 20 மார்க் கேள்வி-பதில் எல்லாம் அதில் தான்.
2] மரியாதையைக் கொடுத்து, பெற வேண்டும்.
உரிமையுடன் என்று டா/டி வேண்டாம்.
கொஞ்சம் கோபமாக இருக்கும்பொழுது சொல்லிவிட்டால், அன்றே உறவு விரிசலிட ஆரம்பித்தது என்றே காலண்டரில் குறித்துக் கொள்ளலாம்.
பெயர் சொல்லி அழைப்பதா? குடும்ப/ வட்டார வழக்கு ஏதேனுமா? யோசித்து கொள்ளுங்கள்.
ஆரம்பத்தில் ஹனி, டார்லிங், டியர், பேபி, ஜாங்கிரி என்றெல்லாம் ஜிலேபி சுற்றிவிட்டால், பின்னர் என்றேனும் "அன்னைக்கு ஜாங்கிரின்னு சொன்னியே? என்று வெங்காய பக்கோடா போல் முகத்தை வைத்துக்கொண்டு கேள்வி வரும்:))
3] தூய்மை
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
- இரண்டுமே அவசியம்.
4] உனக்கேற்ற ஆளாக எனை மாற்றிக்கொண்டேனே! - வேண்டாமே.
மாற்றம் இயல்பாக நிகழ வேண்டும். செயற்கையாக மாறினாலோ/ மாற்றினாலோ, என்றாவது ஒரு நாள் "ஏன் மாற்றிக் கொண்டேன்?" என்று சலித்துக் கொள்ள நேரிடலாம்.
5] உணவை, உட்கொள்ளும் விதத்தை குறை சொல்ல வேண்டாம்.
ஒரே வீட்டில் வளர்ந்தால் கூட சுவையின் விருப்பங்கள் மாறுபடும். அவரவருக்குப் பிடித்ததை சமைக்க, சாப்பிட சுதந்திரம் கொடுங்கள்.
என் அப்பாவிற்கு பாகற்காய் பிடிக்காது, சாப்பிட மாட்டார்கள். அப்பா ஊருக்கு செல்லும் நாட்களில் தான் சமைக்க முடியும். ஆண்டுகள் கடந்த பின்னும், இப்பொழுதும் பாகற்காயை சமைக்கும் போதெல்லாம் அம்மா சொல்லி வருத்தப்படுகிறார்.
6] மறந்தும்கூட பெற்றோரை, உடன்பிறப்பை, உறவினர்களை குறை சொல்ல ஆரம்பித்து விடாதீர்கள்.
தொடர்ந்து ஒரு பழக்கமாகவே மாறி, பின்னாளில் மூன்று தலைமுறறையை குறைசொல்லி, மனஸ்தாபத்தில் முடியும்
7] தேவையான, நேர்மறை விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் பொருளாதார கடுமையான காலகட்டம் ஒன்று எல்லோருக்கும் இருந்திருக்கும். புலம்புவதை கேட்க ஓர் ஆள் கிடைத்ததே என்று உளறிக் கொட்டி அனுதாபம் தேட நினைத்து, மாறாக ஏளனம் செய்து விட்டால், மனது உடைந்த கண்ணாடியாகிவிடும்.
இன்னும் 50-60 வருடங்கள் ஒன்றாக தான் வாழப் போகிறீர்கள். பின்னர் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.
8] வேலையை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அம்மா/அப்பா கொடுத்த சலுகைகள் போல் உலகில் வேறு எங்கும் கிடைக்காது.
அன்றாட வேலைகளை, தேவைகளை கூடுமானவரை நீங்களே செய்து கொள்ள பழகுங்கள்.
"சிக்கிடான்டா ஒரு அடிமை!" என்பது போல் நடத்தினாலோ /அன்பை பெறுவதற்காக ஒரேயடியாக விழுந்து விழுந்து கவனித்தாலோ, ஒருநாள் சாயம் வெளுக்க ஆரம்பித்து பின்னர் சண்டையில் முடியும்
9] சேமிப்பில், செலவில் வெளிப்படைத்தன்மை அவசியம்.
ஒருவருக்கொருவர் தெரியாமல் பணத்தை சேமிப்பது, செலவு செய்வது, பிறருக்கு கொடுத்து உதவுவது அறவே கூடாது.
அவரவர் கிரெடிட்/டெபிட் கார்டுகள் அவரிடம் இருத்தல் நலம். வேண்டுமானால் கேட்டு வாங்கி பயன்படுத்தலாம். ஒன்றும் குறைந்து விட மாட்டோம். பல குடும்பங்களில் பிரச்சனை ஆரம்பிப்பதே பண விவகாரத்தில் தான்.
இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் ₹500 க்கு மேல் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலே என் கணவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தான்.
10] பிறந்தநாளை, திருமணநாளை கொண்டாடுங்கள்.
எல்லாம் அன்பின், அக்கறையின் வெளிப்பாடே. ஏதேனும் சின்ன பரிசுடன்.
"யார் வேண்டுமானாலும் நினைவுப் பரிசு கொடுக்கலாம். சிலரால் மட்டுமே நினைவுகளையே பரிசாக!!!" (கோராவிலிருந்து காப்பி அடித்த வரிகள்:)
11] தினமும் குறைந்தது 2 நிமிடமாவது நேருக்கு நேர் அமர்ந்து ஓரிரு வார்த்தைகள் பேசுங்கள்.
சினிமா/சீரியலில் வருவது போல ரொமாண்டிக்கா பேசுவதெல்லாம் அவரவர் இஷ்டம்.
சில நேரங்களில், சொல்லா வாா்த்தையின்
சுகமே மயில் தோகை போலவே.....
12] காத்து வாக்குல காரமா பேசக்கூடாது.
மொபைல்/டிவி பார்த்துக்கொண்டே, நடந்து போய்க் கொண்டே பேசுவதை தவிர்க்கலாம். சொல்றது காதுல விழுந்தா போதாதா? போதாது.
கோபமோ, குறையோ... நேருக்கு நேர் சொல்லிவிடலாம். தனியாக புலம்பி அரற்றுவது, கிச்சனில் பாத்திரங்களை உருட்டுவது வேஸ்ட்.
எல்லா வானமும்
நீலம். சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுமே ! -ரசிக்கலாம்.
0 Comments