கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவரது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்து வேறு சமூக பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 23.6.2015-ல் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.
வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை, குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை, பிரிவு, கிரிதர் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் மற்றொரு பிரிவிற்கு 5 ஆண்டு கடுங்காவல், சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கியது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
யுவராஜ் உட்பட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர். தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
> இந்த வழக்கில், கொலைக்கு உள்நோக்கம் இல்லை என்றாலும் கொலைக்கு சாதிதான் காரணம் என்பது நிரூபணமாகியுள்ளது.
> விசாரணை நீதிமன்றம் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்துதான் தண்டனை வழங்கியுள்ளது.
> அரசு தரப்பிலும் சாட்சிகளை முழுமையாக விசாரணை செய்துள்ளனர். எனவே விசாரணை நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை.
> வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபட்டுள்ளன.
> வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜ், அவரின் ஓட்டுநர் அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், ஆகிய 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
> வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜ் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும். நன்னடத்தை அடிப்படையில் அவர் முன்விடுதலை கோர முடியாது.
> இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த பிரபு, கிரிதார் ஆகியோருக்கு அந்த தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.
> விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
> சங்கர், அருள் செந்தில், செல்வக்குமார், தங்கதுரை, சுரோன் ஆகியோரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கோகுல்ராஜ் தாயார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுகள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
> இதுபோன்ற வழக்குகளின் காவல் துறை விசாரணையை ஊடகங்கள் பரபரப்பாக்கக் கூடாது.
> கருத்து சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யுவராஜ் ஊடகங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார் என்பன உள்ளிட்ட குறிப்புகள் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.
0 Comments