Ad Code

Responsive Advertisement

குழந்தை பிறந்தவுடன் செய்யவேண்டிய தானங்கள்

 



குழந்தை பிறந்த உடனேயே தொப்புள் கொடி அறுப்பதற்கு முன் செய்ய வேண்டிய சடங்கு என்று ஒரு சடங்கு சொல்லப்பட்டு இருக்கிறது. ‘‘ஜாத கர்மா” என்பார்கள். `ஜாத’ என்றால் பிறந்தவுடன், `கர்மா’ என்றால் செய்ய வேண்டியது என்று பொருள். குழந்தை பிறந்தவுடன் மகிழ்ச்சியோடு பல்வேறு விதமான தானங்களைச் செய்ய வேண்டும். ஸ்ரீராம, லட்சுமணர்கள் பிறந்தவுடன் தசரதன் நிறைய தானம் செய்தான்.


1. ஆலயங்களை புதுப்பிக்கச் சொன்னான்.

2. பூஜைகளை நடத்திவர ஆணையிட்டான்.

3. ஏழு ஆண்டு காலத்துக்கு வரிகட்ட வேண்டாம் என்று மக்களுக்கு மகிழ்ச்சியுடன் சொன்னான்.

4. கருவூலங்களைத் திறந்து மக்களுக்கு ஏராளமான செல்வங்களை வாரி வழங்கினான்.


இறை தவிர்ந்திடுக பார், யாண்டு ஒர் ஏழ்; நிதி

நிறை தரு சாலை தாள் நீக்கி, யாவையும்,

முறை கெட, வறியவர் முகந்து கொள்க எனா,

அறை பறை என்றனன் – அரசர் கோமகன்.


– என்பது கம்பன் காட்டும் செய்தி.


பொதுவாக ஒருவர், தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்திலும், அந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போது, ஏழைகளுக்கும் படித்தவர்களுக்கும் தன்னாலியன்ற தானங்களைச் செய்ய வேண்டும். இங்கே படித்தவர்கள் என்பது வேதம் படித்தவர்களைக் குறிக்கும். அறவோர்கள் என்று அவர்களைச் சொல்வார்கள். அவர்களுக்கு அந்த காலத்தில் தானம்தான் வருமானம். அந்த தானம் செய்வதன் மூலமாக மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும். அதனால், குலம் விளங்கும். இப்படிப்பட்ட நற்செய்கைகளால் எந்த ஒரு வாழ்வும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இருந்தது.


உண்மையில் இது ஒரு பொருளாதாரச் சுழற்சி என்று சொல்லலாம். ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் என்று கேள்விப்பட்டவுடன் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டான். அப்பொழுது ஏராளமான தானம் செய்தான். அதற்கு அடுத்த நாள் பட்டாபிஷேகம் இல்லை; காட்டிற்கு போக வேண்டியதாயிற்று. அப்போதும், யாத்ரா தானமாக தன் பொருள்களை எல்லாம் தானம் செய்தான்.


ஒரு விழா கொண்டாடினாலும், ஒரு ஊருக்கு யாத்திரையாகப் போனாலும், மந்திர பூர்வமாக தானம் செய்கின்ற வழக்கம் உண்டு. அந்த காலத்தில் காசி யாத்திரை, திருமலை யாத்திரை போகிறவர்கள், ஊருக்கு அன்னதானம் செய்துவிட்டுப் போவார்கள். யாசகர்களுக்கும் தானம் செய்வார்கள். ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு இந்த நடைமுறை உண்டு. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகத்தின் எல்லா பகுதிகளிலும் கொடை தருதல் உண்டு. ஏதாவது ஒன்றைக் காரணமாக வைத்துக்கொண்டு ஒருவருக்கு கொடுக்கும் உயர்ந்த குணம் ஆன்மிகத்தின் அடித்தளம்.


எனவேதான், குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் தந்தை நீராடிவிட்டு, தானம் செய்ய வேண்டும் என்றார்கள். குழந்தை ராத்திரியில் பிறந்தாலும், அந்த ராத்திரி நேரத்திலும் நீராடி விட்டு தானம் செய்யலாம் என்று சாத்திரம் சொல்லுகின்றது. பொதுவாக இரவில் நீராடும் வழக்கம் இல்லை என்று சொன்னாலும்கூட கிரகணக்காலத்திலும் இதைப் போன்ற சந்தர்ப்பத்திலும் நீராடுவது தவறில்லை என்று சாத்திரம் சொல்கின்றது. பித்ரு கடன் நீங்கிவிட்டது என்கிற மகிழ்ச்சியில் இந்த தானத்தைச் செய்ய வேண்டும் என்கிறார்கள். எதிர்காலம் என்பது ஒரு சங்கிலித்தொடர். அது அறுபடாமல் வரவேண்டும்.


அப்படியானால் பிள்ளைகள் பிறந்து வம்சம் விருத்தி அடைய வேண்டும். பிள்ளை பிறந்தவுடன் இந்த பித்ரு கடன் அடைகிறது. அன்றைய தினம் நம் குல முன்னோர்கள், அதாவது பித்ருக்கள் நம் வீட்டை நாடி வந்து தங்கள் சந்ததியை (வாரிசை) ஆசீர்வதித்துச் செல்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்தினால் இந்த சந்ததித் தொடர் அறுபடும் பொழுது, முதலில் அந்தப் பெற்றோர்கள், குழந்தை இல்லையே என்று வருந்துவதைவிட, அந்த குலத்தில் உள்ள பித்ருக்கள் வருந்துகிறார்கள்.


அந்த வருத்தம் தீரவே தில ஹோமங்கள் முதலிய சாந்தி பிராயச்சித்தங்கள், புனித நதிகளில் நீராடுதல் முதலிய வழிபாடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. தொப்புள்கொடி அறுப்பதற்குள் நாந்தி ச்ராத்தம், தானம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். நாந்தி ச்ராத்தம், நாந்தி சோபனம் என்றெல்லாம் சொல்வது நீத்தார் வழிபாடுதான். சிலர் இது அமங்கலம். மங்கலத்தில் சேராது என்று தவறாகக் கருதுவார்கள். நம் வீட்டில் கல்யாணம், காட்சி என்று எது நடந்தாலும், முதலில் முன்னோர்களிடம் தெரிவித்து ஆசி பெற வேண்டும்.


பின் குலதெய்வம். பிறகுதான் அந்த காரியத்தைத் தொடங்க வேண்டும். இல்லை என்றால் பல இடையூறுகள் வரும். தொப்புள் கொடி அறுக்கும் வரை பிறப்பு தீட்டு வராது என்பதால் உடனடியாக தானம் செய்ய வேண்டும். கோடி கோடியாகச் செய்ய வேண்டும் என்று இல்லை. உங்கள் சக்திக்கு ஏற்றவாறு செய்ய வேண்டும். நம் மந்திர பிரயோகத்தில் சில நுட்பங்கள் உண்டு. இரண்டு பவுன் வைத்துத் தந்தாலும் சரி, 20 ரூபாய் வைத்துத் தந்தாலும் சரி, இப்படி சொல்லித்தான் தருவார்கள்.


அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே

மயா ஸமர்ப்பிதாம் இமாம்

ஸெளவர்ணீம் தக்ஷிணாம்

யத் கிஞ்சித் தக்ஷிணாம்

யதோக்த தக்ஷிணாமிவ

தாம்ப்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய


இதன் பொருள் அற்புதமானது. ஏதோ என்னால் இயன்ற தட்சிணையை தாம்பூலத்தில் வைத்து தருகிறேன். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களும் ஆசீர்வாதம் செய்வார்கள். இன்னொரு மந்திரம் உண்டு.


ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ:

அனந்த புண்ய பலம் அத: ஷாந்திம் ப்ரயச்சமே.


ஏராளமான பலன் கிடைக்கவும், சாந்தி கிடைக்கவும் இந்த மந்திரம் சொல்லி தட்சிணைகளைக் கொடுப்பார்கள். மந்திரங்களில் பல நல்ல விஷயங்கள் உண்டு. நாம் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். சரி. குழந்தை பிறந்த உடனே தானம் செய்ய முடியவில்லை, என்ன செய்வது? நம் சாஸ்திர தர்மங்கள் எளிமையானது.  ஒருவரை கசக்கிப் பிழிந்து கஷ்டப்படுத்துவது அல்ல. பத்து நாள் கழித்துகூட இந்த ஜாத கர்மாவைச் செய்யலாம். மனம்தான் முக்கியம்.


‘‘ஐயோ, செய்ய வேண்டியிருக்கிறது. காசு செலவாகிறது’’ என்று எண்ணக்கூடாது. பெறுகின்றவர்களும் ஒரு துளி கொடுத்தால்கூட, “பாவம் அவன் சக்திக்கு இது அதிகம்” என்று நினைத்து ஆசீர்வதிக்க வேண்டும். இல்லாவிட்டால் வைதிகர்களுக்கும் பாவம் வந்து சேரும். இந்த ஜாதகர்மா என்பது நமக்கு நல்ல வாழ்க்கையையும், மரணத்திற்கு பின் சொர்க்கத்தையும் தரும் என்று சாத்திரம் சொன்னாலும், குழந்தைக்கு ஏற்படக்கூடிய சகல அரிஷ்டங்களையும் தோஷங்களையும் நீக்குகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.


குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இரண்டு வருடம் வரை அடிக்கடி நோய்வாய்ப்படும். எந்த நோயும் குழந்தைக்கு ஆபத்தில் முடியும். இதனை `பாலரிஷ்டம்’ என்பார்கள். அந்தந்த நோயிலிருந்து இந்த கர்மா காப்பாற்றும். தோஷ கிரகங்களைச் செயல் படாமல் செய்து, அதிர்ஷ்ட கிரகங்களைத் தூண்டும். அதாவது எதிர்மறை சக்திகளை விரட்டி, நேர்மறை சக்தியை அதிகரிக்கும்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement