வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில்ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், புறநகர் பகுதிகளில் 120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் 120க்கும், இஞ்சி 210க்கும், வண்ண குடமிளகாய் 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 650 லாரிகள் மூலம் தினமும் 7000 டன் காய்கறிகள் வருகிறது. ஆனால் இன்று காலை 380 வாகனங்களில் 4,500 டன் காய்கறிகள் குறைவாக வந்தன. இதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ பீன்ஸ் 120க்கும், இஞ்சி 210க்கும், வண்ண குடமிளகாய் 200க்கும், பட்டாணி 180க்கும், தக்காளி 100க்கும், வெங்காயம் 20க்கும், சின்ன வெங்காயம் 80க்கும், உருளைகிழங்கு 30க்கும், ஊட்டி கேரட் 70க்கும், பெங்களூர் கேரட் 50க்கும், பீட்ரூட் 60க்கும், சவ்சவ் 25க்கும், முள்ளங்கி 45க்கும், முட்டைகோஸ் 20க்கும், வெண்டைக்காய் 50க்கும், கத்திரிக்காய் 50க்கும், காராமணி 50க்கும், பாவக்காய் 50க்கும், புடலங்காய் 30க்கும், சுரக்காய் 40க்கும்,
சேனைக்கிழங்கு 40க்கும், முருங்கைக்காய் 40க்கும், சேமகிழங்கு 35க்கும், காலிபிளவர் 30க்கும், பச்சைமிளகாய் 60க்கும், அவரைக்காய் 70க்கும், பீர்க்கங்காய் 50க்கும், எலுமிச்சைபழம் 80க்கும், நூக்கல் 40க்கும், கோவக்காய் 30க்கும், கொத்தவரங்காய் 35க்கும், கொத்தமல்லி 12க்கும், புதினா 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி 230க்கும், பீன்ஸ் 140க்கும், பட்டாணி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து இல்லத்தரசிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த 25 நாட்களாக அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்த நிலையில்தான் உள்ளது. இன்று காலை திடீரென தக்காளி, இஞ்சி, பீன்ஸ், பட்டாணி, வண்ண குடமிளகாய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்கறிகள் விலை எப்போது குறையும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என வேதனையுடன் தெரிவித்தனர்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்துகுறைவால் தக்காளி, இஞ்சி, பீன்ஸ், பட்டாணி, வண்ண குடமிளகாய் விலை உயர்ந்துள்ளது.
மார்க்கெட்டுக்கு தினமும் 50ல் இருந்து 60 வாகனங்களில் தக்காளி லோடு வரும். இன்று காலை 35 வாகனங்களில் குறைவாக தக்காளி லோடு வந்துள்ளது. இதனால்தான் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிக லோடு வந்தால்தான் காய்கறி விலை குறையும். இந்த விலை இந்த மாதம் வரை நீடிக்கும் தெரிகிறது” என்றார்.
0 Comments