Ad Code

Responsive Advertisement

மனைவி - ஒரு அற்புதமான உறவு

 



அம்மாவுக்குப் பிறகு, அவள் இல்லாமல் எந்த மனையின் (வீட்டின்) வாசலும் மனமற்று போய்விடும்.


நான் கண்ட உதாரணம் ஒன்றை உங்களுடன் பகிர ஆசை கொள்கிறேன்.


அவர் ஒரு சாதாரண செங்கல் அறுக்கும் வேலை செய்பவர், அவருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.


மனைவி இறந்த பிறகு இவர் மதுவிற்கு அடிமையாக,


மகனும் தன் அப்பாவிடம் இருந்து தன்னால் பெற்றுக்கொள்ள முடிந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு தனியே விட்டு விட்டார்.


மகளோ குடிகார அப்பாவை கூப்பிட்டு வீட்டில் குடித்தனம் வைத்தால், வாழ வந்த வீட்டில் வாய்கூசாமல் தவறாகப் பேசுவார்கள் என்று…மகளும் அப்பாவை தனியே விட்டு போய்விட்டார்.


தனியாளாக… அவருக்காக சமைத்து சாப்பிட்டுக்கொண்டு வேலை செய்து ஈட்டும் வருமானத்தில் பண்டிகை தினங்களில் பேரன் பேத்திகளுக்கு செலவழித்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.


அவரைப் பலமுறை பார்க்கும் சமயத்தில் எல்லாம் அவர் உடுத்திக் கொள்ளும் ஒரே ஆடை ஒரு சந்தன கலர் சட்டை தான்.


அவரின் தோற்றத்தைப் பார்த்து எனக்கு தோன்றியதை கூறுகின்றேன்.



சில ஆண்டுகளுக்கு முன்பு அவரின் மனைவி கேன்சரால் இறந்த பிறகு…


நேர்த்தியாக சீவப்பட்ட அவரின் தலைமுடி இப்பொழுது அலங்கோலமாக உள்ளதை கண்டேன்.

மீசையும் தாடியும் சுத்தம் செய்து முகத்தை மினு மினுக்க செய்ய அவர் மனம் ஏங்கவில்லை போலும்…

புகையிலை போட்டு போட்டு , அவளின்றி மனம் வெந்ததுபோல் அவரின் உதடுகளும் வெந்தொழிந்தன.

எத்தனை துன்பங்கள் இருந்தாலும் அவள் போன துன்பத்தை விடவா பெரிது என அத்துணை அலட்சியமும் அவரிடம் ஒட்டிக்கொண்டது. மற்றும்

ஏக்கம் இல்லாத அவரின் கண்கள் அவளின் இழப்பையே உணர்த்துகிறது.

கருத்த கவலையற்ற தேகம், இனி யார் என்னை ரசித்தால் என்ன? ரசிக்காவிட்டால் என்ன? என எந்தவித எதிர்பார்ப்புமின்றி, துவைக்காத சந்தன கலர் சட்டையை உடுத்திக் கொண்டு வண்டியில் அவர் செல்லும் வேகம்…உயிரின் மேல் நிச்சயம் அக்கரையற்றது தான்…அவர் உடன் சென்ற அனுபவம் தான் இந்த பதிவு…


அன்பு கொண்ட மனைவி …அவளுக்கு பிறகு உயிரின் மேல் எந்தவித ஆசையும் இல்லை போலும்…


இதில் என் ஆசையையும் சொல்லிவிடுகிறேன்…


பொதுவாக…கணவன் மனைவி இருவரில் கணவன் இல்லை என்றால் மனைவி தன் பிள்ளைகளின் வீட்டில் ஒரு வேலைக்காரி போல, வீட்டு வேலை செய்வதற்கும், இரண்டு ஒரு பாத்திரத்தை விளக்கியும், அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கு ஆய் போன பின் கழுவி விடுவதற்குமாவதே வைத்துக் கொள்கிறார்கள்.


அதே அவள் போன பின்பு நான் வாழ்ந்தால், நல்ல பிள்ளைகள் இல்லை என்றால், ….போதும் போதும் என்று தடுத்த கைகள், பிச்சை எடுக்காத குறையாய் உணவு உண்ண திண்டாட வேண்டும்…தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்க ஒரு நாதியிருக்காது…


பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கிழவனை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள், இவ்வளவு வயது ஆகியும் இவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று என்னென்னமோ அவதூறு பேசும் உலகத்தையும் பார்த்துள்ளேன்.


தாத்தா தாத்தா என்று ஏக்கத்தோடு தோளின் மீது ஏறி தொங்கும் பேரன் பேத்திகளையும் கண்டுள்ளேன்.


உலகம் என்ன சொல்கிறது என்று எல்லாம் எனக்கு கவலை, அவள் போன பின்பு எவள் என்ன சொன்னால் எனக்கென்ன என்று போகிறது மனம்.


ஆனாலும்….ஒன்று மட்டும் மனதை உறுத்துகிறது.அவளுக்கு முன் நான் இறந்துவிடக்கூடாதா?


என் வீட்டு மகாராணியான‌ என் மனைவி, நான் இறந்த பிறகு என் மகனின்/மகளின் வீட்டு வேலைக்காரி ஆவதா? இறந்தும் அழுமே என் இதயம்!…


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement