கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், அங்கு போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் கணவர் 30%க்கும் அதிகமான வாக்குகளை பெற்று பிரதான கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக இருப்பவர் மதுரையைச் சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ். இவர் பிரதமர் அலுவலகத்தில் இணை இயக்குனராக பணியாற்றிவிட்டு மீண்டும் தமிழக பணிக்கு திரும்பியிருக்கிறார். அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகிறார். அமுதாவின் கணவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த ஷம்பு கலோலிகர் (வயது 58) கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழக கதர் மற்றும் கைவினைப் பொருட்கள் துறையின் இணைச் செயலாளராக இருந்து சமீபத்தில் தான் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் 1991 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகார் ஆவார்.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ரெய்பேக் ஒன்றியத்தில் உள்ள யபரட்டி எனும் பகுதியை சேர்ந்த ஷம்பு கலோலிகர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலம் இந்திய ஆட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தார். தமிழக ஆட்சிப் பணிக்கு வரும் முன்னர் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் இயக்குனராகவும், ரசாயணம் மற்றும் மருந்து துறையின் இணைச் செயலர் என மத்திய அரசின் ஆட்சிப் பணியிலும் பணிபுரிந்தார்.
தான் பிறந்த ஊர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என அறிந்து கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 2022 இறுதியில் ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுச் சென்றார். இவரின் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியின் அபிமானிகளாக அறியப்படுகின்றனர். இவருடைய உறவினரான சாந்தா பெலாகவி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 2012ல் இருந்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போட்டியிடவே ஷம்பு கலோலிகர் விரும்பியதாக தெரிகிறது.
பின்னர் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக களமிறங்க முடிவு செய்தார் ஷம்பு கலோலிகர்.
ரெய்பேக் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட அமுதா ஐ.ஏ.எஸின் கணவரான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷம்பு கலோலிகர் மதியம் 1 மணி நிலவரப்படி 47,217 வாக்குகளுடன் (33% வாக்குகள்) பெற்று தற்போது 2வது இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் தோல் துர்யோதன் மகாலிங்கப்பா இந்த தொகுதியில் 50,096 வாக்குகள் (35%) பெற்று முதலிடத்தில் உள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் பிரதீப்குமார் மலகி 21,302 வாக்குகளுடன் 3வது இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் மகாவீர் லக்ஷன் மோகிதே 20,266 வாக்குகளுடன் 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments