Ad Code

Responsive Advertisement

பெண்களுக்கு அளிக்கப்பட்ட 2 மணி நேர சலுகை அறிவிப்பை திரும்பப் பெற முடியாது - ஆளுநர் தமிழிசை

 



பெண்களுக்கு அளிக்கப்பட்ட 2 மணி நேர சலுகை அறிவிப்பை திரும்பப் பெற முடியாது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.


இந்திய அஞ்சல் துறையில் புதுச்சேரி அஞ்சல் கோட்டம் சார்பில் கைவினைஞர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான ஏற்றுமதி மற்றும் அஞ்சல் வழி ஏற்றுமதி மையம் பற்றிய அறிமுகக் கூட்டம் இன்று ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.


தமிழ்நாடு வட்டம் முதன்மை அஞ்சல் துறை தலைவர் சாருகேசி வரவேற்றார். புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு அறிமுகக் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தெற்கு மண்டல இணை இயக்குநர் ஜெனரல் உன்னிகிருஷ்ணன், இணை இயக்குநர் செல்வநாயகி ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சல்வழி ஏற்றுமதி மையம் பற்றி விளக்கவுரை ஆற்றினர். சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.


இக்கூட்டத்தில் பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, " புதுச்சேரியில் இன்றிலிருந்து அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பெண் ஊழியர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த 2 மணி நேரத்தை மிகவும் பலனுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். பெண் ஊழியர்களின் கடுமையான உழைப்புக்கு இது ஒரு சிறிய பரிசு. இதை பலர் விமர்சனம் செய்கிறார்கள். இதை திரும்பப் பெற வேண்டும் என்கிறார்கள். இது பெண்ணடிமைத் தனம் என்றும் கூறுகிறார்கள். இவர்கள் பெண் உரிமை என்று எதை கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.


அவர்களது வீட்டில் பெண்களை வேலையே செய்ய வைக்காத மாதிரியே பேசுகிறார்கள். இதை எதிர்த்து பேசுபவர்களின் வீட்டிலும் அவர்களது பணியை பெண்கள்தான் செய்கிறார்கள். எதைச் செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்று ஒரு நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார். நிச்சயமாக 2 மணி நேர சலுகை அறிவிப்பை திரும்பப் பெற முடியாது.


ஜிப்மர் புதுச்சேரிக்கும், தமிழகத்துக்கும் முழுமையான சேவையை ஆற்றி வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று என்ன சிகிச்சை பெற முடியுமோ, அந்த சிகிச்சையை மிகச்சிறந்த மருத்துவர்கள் அளித்து வருகிறார்கள். கரோனா நேரத்தில் ஜிப்மர் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையை யாரும் மறுக்க முடியாது. 70 சதவீதம் மக்கள் தமிழகத்தில் இருந்து ஜிப்மருக்கு வந்து சேவையைப் பெறுகிறார்கள். குறை சொல்ல முடியாத அளவுக்கு ஜிப்மர் மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். ஜிப்மர் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் செய்து நோயாளிகளுக்கு இடையூறு செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏழை மக்களுக்கு ஜிப்மரில் கட்டணம் கிடையாது.


60 பரிசோதனைகளுக்கு கட்டணம் என்கிறார்கள். இந்த பரிசோதனைகளுக்கு சென்னை, பெங்களூரு, மும்பைக்கு சொல்ல வேண்டியதாக இருந்தவை. இதையெல்லாம் ஒரு கூரையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையெல்லாம் பாராட்டுங்கள். குறிப்பாக புற்றுநோயை கண்டுபிடிக்கக் கூடிய பரிசோதனைகள் ஜிப்மரில் கிடைக்கிறது. முதலில் இதைப் பாராட்டுங்கள். ஆனால், பாராட்ட மாட்டீர்கள்.


ஜிப்மரில் ஏழை மக்களிடம் பணம் வாங்கப்படுகிறது என்பது பொய்யான செய்தி. ஏழை மக்களிடம் பணம் வாங்கப்பட்டிருந்தது என்று என்னிடம் சொன்னால், அதை திருப்பித் தர சொல்கிறேன். தமிழகத்தில் வேலையில்லை என்று புதுச்சேரியில் போராட்டம் நடத்துகிறார்கள். அங்குள்ள எம்.பி.,க்கள் அந்தந்த ஊரியிலேயே இருக்கச் சொல்லுங்கள். விழுப்புரம் எம்.பி. ஏன்? இங்கு வந்து உட்கார்ந்துள்ளார். அவருக்கு முகவரி என்ன புதுச்சேரியா?


முதலில் அவர்களது தொகுதி வேலையை பார்க்கச் சொல்லுங்கள். ஜிப்மரில் குறை இருந்தால் சொல்லுங்கள். அதை சரி செய்யலாம். ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு செய்வது போல் ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு எதுவும் இல்லை. விளம்பரம் வேண்டும் என்றால் தமிழகத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். புதுச்சேரிக்கு வந்து ஏன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்.


பல கோடி செலவில் புதுமையாக அமைக்கப்பட்ட உயர்தர பரிசோதனைக்கூடத்தில், செய்யப்படும் பரிசோதனைக்குத்தான் பணம் வாங்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கின்ற பரிசோதனைக்கு அல்ல. மீண்டும் நான் சொல்கிறேன் அடிப்படையில் ஏழைகளுக்கு கட்டணம் கிடையாது.


வேண்டுமென்றே ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அப்படி கட்டணம் வசூலித்தால் உங்களை விட எனக்கு அக்கறை இருக்கிறது. ஒருவேளை கட்டணம் வாங்கக்கூடாத நபர்களிடம், கட்டணம் வாங்கியிருந்தால் முதல் கண்டனத்தை கொடுப்பவர் நானாகத்தான் இருப்பேன் என்றார். ஜிப்மரில் கட்டணம் வசூலிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஜிப்மர் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement